மணிப்பூர் வன்முறை: ‘அனைத்து கட்சி கூட்டத்தில் என்ன நடந்தது?’ - திருச்சி சிவா பேட்டி

மணிப்பூர் வன்முறை தொடர்பாக கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் என்ன நடந்தது? என்பது குறித்து திருச்சி சிவா கூறியுள்ளார்.
திருச்சி சிவா
திருச்சி சிவா

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி சமூகத்தினரை பழங்குடி எஸ்.டி பட்டியலில் சேர்க்க ஆட்சியில் உள்ள பா.ஜ.க அரசு முயற்சித்தது. இதற்கு மணிப்பூர் உயர் நீதிமன்ற தீர்ப்பும் அடிப்படையாக இருந்தது.

ஆனால் மைத்தேயி சமூகத்தினருக்கு பழங்குடி இன அந்தஸ்தை வழங்க பழங்குடி இனத்தவராகிய குக்கி மற்றும் நாகா இன மக்கள் எதிர்த்தனர். மைத்தேயி இனத்தவர்கள் ஏற்கனவே வளம், செல்வாக்கும் மிகுந்தவர்கள்.

இந்நிலையில் அவர்களுக்கு பழங்குடி இன அந்தஸ்து வழங்கினால் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு பலன்கள் குறைவதுதோடு பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலமும் படிப்படியாக ஆக்கிரமிக்கப்படும் என பழங்குடியின மக்கள் அஞ்சுகின்றனர்.

இதனை எதிர்த்து கடந்த மே 3ம் தேதி சுராசந்த்பூரில் பழங்குடியினர் பாதயாத்திரை மேற்கொண்டபோது மிகப்பெரிய மோதலாக வெடித்தது. இதில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

இந்நிலையில் மணிப்பூர் வன்முறை குறித்து டெல்லி நாடாளுமன்ற கட்டிடத்தில் மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு கட்சிகள் பங்கேற்று உள்ளன. தமிழ்நாட்டில் இருந்து தி.மு.க சார்பில் திருச்சி சிவா எம்.பி மற்றும் அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை ஆகியோர் பங்கேற்றனர். இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது.

அனைத்து கட்சி கூட்டத்துக்கு பின்னர் தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘ அமைதியை நிலை நாட்டுவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என உள்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினோம்.

அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவை மணிப்பூருக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினோம். மணிப்பூர் விவகாரத்தில் தென்கோடியில் இருக்கும் மாநில முதலமைச்சர் வருத்தம் தெரிவிக்கிறார். கண்ணீர் சிந்துகிறார். ஆனால் மணிப்பூர் பிரச்னை எவ்வளவு தீவிரம் என்பது தெரிந்திருந்தும், பிரதமர் இந்த விவகாரம் குறித்து பேசாதது வருத்தம் அளிக்கிறது.

மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஒரு உண்மை கண்டறியும் குழு ஏற்படுத்த வேண்டும் என அங்கு பாதிக்கப்பட்ட பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதனை பரிசீலிக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்துனோம்.

மணிப்பூர் பிரச்னை என்பது, ஆட்சியாளர்களின் நிர்வாக திறமையின்மையால் மற்றும் நிர்வாக தோல்வியால் வந்தது. இப்பிரச்னையை ராணுவத்தை வைத்தோ அல்லது துணை ராணுவத்தை வைத்தோ அடக்க முடியாது என எடுத்துரைத்தோம்.

மேலும் உள்துறை அமைச்சர் பேசும்போது பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவு, அத்தியாவசிய பொருட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என கூறினார்.

கடந்த சில நாட்களாக எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. திறமையான அதிகாரிகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வந்தபடி உள்ளனர் என உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

ஆனாலும் அனைத்துக் கட்சி குழு மணிப்பூருக்கு செல்வது குறித்து எந்த முடிவையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவிக்கவில்லை. மணிப்பூரில் சகஜ நிலை திரும்ப வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை’ என கூறினார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com