திருச்சி: முதியோர் உதவித்தொகை வழங்குவதில் தி.மு.க-வினர் பாரபட்சம் - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

வழியற்றவர்களின் வாழ்வாதாரத்தை வழித்தெடுத்த மாவட்ட நிர்வாகம்.
திருச்சி: முதியோர் உதவித்தொகை வழங்குவதில் தி.மு.க-வினர் பாரபட்சம் - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

அரசியல்வாதிகளுக்கான ஓய்வூதியங்கள் சலுகைகள் எதுவும் குறைக்கப்படாத நிலையில், ஆதரவற்ற முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி உதவி பெறும் நபர்களின் எண்ணிக்கையை குறைத்து பணத்தை மிச்சப்படுத்தி இருக்கிறது திருச்சி மாவட்ட நிர்வாகம்.

தமிழக அரசின் வருவாய்த்துறையின் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டம் மற்றும் மாற்றுதிறனாளிகள் என பல்வேறு திட்டங்களின் கீழ் தகுதியுள்ளவர்களுக்கு மாதம் மாதம் ரூ.1,000, மாற்றுத்திறனாளிகள், இலங்கை அகதிகளுக்கு ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.

இதில் தேசிய திட்டங்களுக்கு மட்டும் மத்திய அரசு தனது சார்பில் பங்களிப்பு நல்குகிறது. இதில் 2021ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் தகுதியில்லாதவர்கள் எனக் கூறி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கானோரை கண்டறிந்து அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே சிலருக்கு மட்டும் மீண்டும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

இதுகுறித்த தகவல்களை சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் பெற்றுள்ளார். அதன்படி கடந்த 20 மாதங்களில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டிருக்கும் தகவல் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

திருச்சி மாவட்டத்தில் தேசிய முதியோர் உதவித்தொகை திட்டத்தில் 36 ஆயிரத்து 813 பேரும், தேசிய மாற்றுத்திறனாளிகள் திட்டத்தில் 546 பேரும், தேசிய விதவைகள் ஓய்வூதியத்திட்டத்தில் 22 ஆயிரத்து 616 பேரும், மாற்றுதிறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தில் 19 ஆயிரத்து 459 பேரும், மற்ற ஓய்வூதியதித் திட்டங்களில் சேர்த்து சுமார் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 774 பேர் மாத ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

2021-ல் தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தகுதியற்றவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்தி ஆயிரக்கணக்கானோருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் 2021 ஜூன் 1ம் தேதி முதல் 2023 பிப்ரவரி 28ம் தேதி வரை தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியம் பெற்று வந்தவர்களில் 10 ஆயிரத்து 199 பேருக்கும், ஆதரவற்ற விதவை உதவித்தொகை பெற்று வந்த 5 ஆயிரத்து 346 பேரும், அனைத்து ஓய்வூதிய மற்றும் உதவித்தொகை திட்டங்களையும் சேர்த்து மாவட்டம் முழுவதும் சுமார் 19 ஆயிரத்து 869 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதால் முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், விவசாயத் தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தநிலையில், ஓய்வூதியம் நிறுத்தப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோரை விசாரித்து ஓய்வூதியம் நிறுத்தப்பட்ட 19 ஆயிரத்து 869 பேரில் 2 ஆயிரத்து 541 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

அதேசமயம், இதே காலகட்டத்தில் தி.மு.க ஆட்சியில் பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இந்த 20 மாதங்களில் 18 ஆயிரத்து 784 பேருக்கு புதிதாக ஓய்வூதியத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முழுக்க முழுக்க தி.மு.க-வினரால் பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து வருவாய்த்துறையினர், 'தகுதி இல்லாதவர்கள்தான் நீக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், மீண்டும் நீக்கப்பட்டவர்களுக்கு இணையாக புதிய நபர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசுத்துறைகள் ஆய்வுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ‘மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை தொடர்பான மனுக்கள் மீது அதிகாரிகள் சட்ட விதிமுறைகளோடும், மனிதாபிமானத்தோடும் பரிசீலிக்க வேண்டும். முதியோர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரை உதவித்தொகைக்காக அலைக்கழிக்கக்கூடாது என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

-ஷானு

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com