மகளுக்கு கோயில் கட்டி வழிபடும் திருச்சி பெற்றோர் - நெகிழ்ச்சி பின்னணி

மகளுக்கு கோயில் கட்டி வணங்கும் தந்தை
மகளுக்கு கோயில் கட்டி வணங்கும் தந்தை

கோயில்கள் நமது பரம்பரை பண்பாட்டை நிலை நிறுத்த உதவுவது உண்மை. நம் நாட்டில் நம் முதியோருக்கும், நம்மால் ஈர்க்கப்பட்டோருக்கும், நம் வளர்ப்பு பிராணிகளுக்கும் கோயில் கட்டி வழிபாடு நடத்துவது என்பது தற்போது அதிகரித்திருக்கிறது.

அந்த வகையில், திருச்சி, மணப்பாறையில் தனது மகளுக்கு கோயில் கட்டி சித்திரை - வைகாசி மாதங்களில் பிரம்மாண்டமாக விழா எடுத்து வருகிறார் வெள்ளையம்மாபட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி. பழனிச்சாமி-லட்சுமி தம்பதியினருக்கு காவியா, தனுஜா என்ற இரு மகள்களும், சண்முகநாதன் என்ற மகனும் இருந்தனர். இந்நிலையில் 2-வது மகள் தனுஜாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து பழனிசாமி குழந்தையைத் தூக்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் கடந்த 2007-ம் ஆண்டு மணப்பாறையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது பன்னாங்கொம்பு அருகே சென்றபோது இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே தனுஜா உயிரிழந்தார். தனுஜாவின் இறுதிச் சடங்கு முடிந்த பின் 9-ம் நாள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் அவரது ஈமக் காரியங்களை செய்து கொண்டிருந்தனர். அப்போது வேதமந்திரங்கள் ஓதிக்கொண்டிருந்த ஐயர், தனுஜா போல பேசி ’’எனக்கு ஈம காரியங்கள் செய்ய வேண்டாம். மூன்று ஆண்டுகளில் நான் தெய்வமாக வீட்டிற்கே வருவேன்’’என அருள்வாக்கு கூறியதாகச் சொல்லப்படுகிறது.

அதேபோல் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பழனிச்சாமியின் தம்பி, பாலு என்பவர் சிறுமி தனுஜா போல பேசி, ‘’எனக்கு கோவில்கட்டி பால்குடம் எடுத்து பூக்குழி இறங்க வேண்டும்’’என அருள் வந்து கூறியுள்ளார். இதன் பிறகு தனுஜாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து பழனிச்சாமி வீடு அருகே தனுஜாவிற்கு ஒரு அடி உயர சிலை எழுப்பி கோயில் கட்டியுள்ளனர்.

கோயிலுக்கும் சிறுமியின் பெயரான 'தனுஜா அம்மன்' என்ற பெயரையே வைத்துள்ளனர். இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் பால்குடம் மற்றும் பூக்குழி இறங்கும் விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு பால்குட விழா வெள்ளையம்மாபட்டி மூக்கரை பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு கோயிலை வந்தடைந்தது. பின் கோயில் முன் பூக்குழி இறங்கி தனுஜாவின் சிலைக்கு பால் அபிஷேகம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. விழாவில் வெள்ளையம்மாபட்டி, பின்னத்தூர், பன்னாங்கொம்பு, பலவாரப்பட்டி, கலிங்கப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். விபத்தில் உயிர்நீத்த மகளுக்கு தந்தை கோவில் கட்டி வருடம் தோறும் விழா எடுப்பது இந்தப் பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தி உள்ளது.

- ஷானு.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com