திருச்சி: மோசடியில் அரசியல் கூட்டணி - பா.ஜ.க பிரமுகருடன் கைகோர்த்த வி.சி.க பிரமுகர் கைது

எஃல்பின் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்களில் சிவகாசி புகழ் ஜெயலட்சுமியும் ஒருவர்
வி.சி.க. பிரமுகர் பிரபாகரன்
வி.சி.க. பிரமுகர் பிரபாகரன்

திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விடுதலை தொழிலாளர் முன்னணியின் மாநில துணைச்செயலாளருமான பிரபாகரன் எஃல்பின் நிறுவன மோசடியில் சம்மந்தப்பட்டதாக சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சியை தலைமையிடமாக கொண்டு எஃல்பின் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இதன் அலுவலகங்கள் இயங்கி வந்தன. பா.ஜ.க-வைச் சேர்ந்த அரசர் என்ற ராஜா என்பவர்தான் இந்த மோசடிக்கு மூல காரணம், காரணம். இவர்தான் இந்த எஃல்பின் நிறுவனத்தின் உரிமையாளர்.

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும், பணம் இரட்டிப்பாக மாறும், வெளிநாடு சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு கவர்சிகரமான திட்டங்களை, கவர்ச்சியான விளம்பரங்களையும், பொய்யான வாக்குறுதிகளையும் வழங்கி மக்களிடம் விளம்பரப்படுத்தினர்.

இதை நம்பி தமிழ்நாடு முழுவதும், எஃல்பின் நிர்வாகிகளின் ஆசை வார்த்தையை நம்பி மோசம் போன பலர் அந்த நிறுவனத்தில், அரசு அதிகாரிகள், காவல்துறையை சேர்ந்தவர்கள், நிதி நிறுவன உரிமையாளர்கள், பொதுமக்கள் என ஏராளமான மக்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர்.

மேலும், இந்த நிறுவனம் கிளை நிறுவனங்களாக 'ஸ்பாரோ குளோபல் டிரேட்', வராகமணி பிரைவேட், சென்னை, ஜேபி ஓரியண்ட் டெக் மார்க்கெட்டிங் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஆர்.எம். வெல்த் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட், இன்பி கேலக்ஸி மார்க்கெட்டிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் அறம் மக்கள் நலச்சங்கம், அறம் டி.வி., என பல துணை நிறுவனங்களையும் நடத்தி வந்தது.

இந்தநிறுவனத்தில், முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை முறையாக வழங்காமல் பண மோசடி செய்ததாக பல முறை அந்த நிறுவனத்தின் மீது தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டன.

எஃல்பின் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்களில் சிவகாசி புகழ் ஜெயலட்சுமியும் ஒருவர். இவர் எஃல்பின் நிறுவன வாசல் முன்பு பலமுறை சத்யாகிரக போராட்டம் நடத்தியபோதுதான் இந்த வழக்கு மேலும் சூடுபிடித்தது.

தமிழ்நாடு முழுவதும் பல கோடி ரூபாய் மோசடி செய்ததால் இவ்வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வந்தனர். புகாரின் அடிப்படையில் நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்வது வழக்கமாகிப்போனது.

இதற்கிடையே மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் எல்ஃபின் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அந்த குழு நடத்திய விசாரணையின் அடிப்படையில் நிறுவனத்தின் உரிமையாளர்களான பா.ஜ.க-வைச் சேர்ந்த அரசர் என்ற ராஜா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கியமானவர்களில் திருச்சி கீழப்புலிவார்டு ரோட்டை சேர்ந்த பிரபாகரனும் ஒருவர். பிரபாகரன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விடுதலை தொழிலாளர் முன்னணியின் மாநில துணைச் செயலாளராகவும், திருச்சி மாநகராட்சியின் 17-வது வார்டு மாமன்ற உறுப்பினராகவும் இருக்கும் நிலையில் சில மாதங்களாக தலைமறைவானார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் நீண்டநாட்களாக தலைமறைவாக இருந்த பிரபாகரனை நேற்று இரவு சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் கைது செய்தனர். பின்னர் மதுரையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் பிரபாகரன் ஆஜர்படுத்தப்பட்டு நள்ளிரவு சிறையில் அடைக்கப்பட்டார்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச்சேர்ந்த பிரபாகரன் மீது கடந்த 2002ம் ஆண்டு பொன்மலையில் நடந்த இரட்டை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர் என்பதும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாவளவனுக்கு தேர்தலின்போது செலவு செய்வதற்காக சுமோ காரின் கதவுகளில் மறைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 கோடி பணம் அரியலூர் அருகே கைப்பற்றப்பட்ட வழக்கும் இவர் மீது நிலுவையில் உள்ளது.

- திருச்சி ஷானு

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com