திருச்சியில் ஏடிஎம் கொள்ளை முயற்சி சிசிடிவி காட்சிகளை வைத்து இரண்டு சிறுவர்களை கைது செய்தனர்.
திருச்சியில் கடந்த 18-ம் தேதி அதிகாலை திருச்சி - திண்டுக்கல் சாலை கருமண்டம் கல்யாணசுந்தரம் 4வது குறுக்கு தெருவில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே உள்ள ஏடிஎம் -ல் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பது குறித்து அங்கு பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர்கள் வங்கிக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த ஏடிஎம் மையத்தில் பணத்தை கொள்ளையடிக்க, கடந்த 18ம் தேதி அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அந்த இயந்திரத்தில் பணம் வெளிவரும் பகுதியை இரும்பு கம்பியால் நெம்பியதில் மிஷினாது சேதமடைந்தது.
அந்த இயந்திரத்தில் பணம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பெட்டகத்தை திருடர்களால் திறக்க முடியவில்லை. இந்த கொள்ளை முயற்சி குறித்து அமர்வு நீதிமன்ற
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ஏடிஎம் கொள்ளை முயற்சி குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளிவந்துள்ளது. அதில், 16 வயதிற்குட்பட்ட இரு சிறுவர்களில் ஒருவன் ஏடிஎம் வாசலில் நிற்கிறான். மற்றொரு சிறுவன் அரைக்கால் சட்டை, பனியனுடன் ஏடிஎம் மிஷினில் ஏறி சிசிடிவி கேமராவை உடைக்கிறான்.
ஆயினும் அவனின் முயற்சி தோற்றதால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து லட்சக்கணக்கான பணம் தப்பியது. சிசிடிவி கட்சி அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் இருவரையும் தற்போது கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மிளகுபாறை பாபு (வயது16), குளத்துக்கரையை சேர்ந்த சந்தோஷ் (வயது 16) இருவருக்கும் தந்தை கிடையாது. இருவரும் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள். கஞ்சா, புகை மதுப்பழக்கத்திற்கு ஆளான சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.