திருவெறும்பூர் அருகே உள்ள மேல குமரேசபுரத்தில் நடந்த புனித சகாய அன்னை ஆலயத்தின் 39 வது தேர் பவனி விழாவில் வாலிபர்களுக்கு அருவாள் வெட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவெறும்பூர் அருகே உள்ள மேல குமரேசபுரத்தில் புனித சகாய அன்னை ஆலயத்தின் 39 வது ஆண்டு திருத்தேர் பவனி நேற்று இரவு நடைபெற்றது. இந்த திரு தேர்பவனி தொடங்கியதிலிருந்து பிரச்சனைகள் இருந்ததாகவும், வான வேடிக்கை வைக்கும் பொழுதும் பிரச்சினைகள் தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை அசோக் நகர் பகுதியை சேர்ந்த சரவணகுமார் மகன்கள் கார்த்தி குமார் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோரை மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டியுள்ளனர். வெட்டுப்பட்ட இருவரும் அந்தப் பகுதியில் உள்ள அவரது சகோதரி சத்யா வீட்டில் தன்னை வெட்டிவிட்டதாக கூறி அங்கே கீழே மயங்கி விழுந்துள்ளனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால், சப்பரம் ஓடும் வீதியில் ரத்தக் கறை படிந்தது. இதனால், அப்பகுதியில் சப்பரம் நிறுத்தப்பட்டதோடு தொடர்ந்து சாலையில் இருந்த ரத்தக் கறையை கழுவி சுத்தம் செய்த பிறகே சப்பரம் மீண்டும் சென்றது. சப்பரம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு நிறுத்தப்பட்டது. இதனால், அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் திருவெறும்பூர் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.