திருச்சியின் முக்கியப்பகுதிகளில் சொந்தக் குழந்தைகளை வைத்தும், வாடகைக்கு குழந்தைகளை எடுத்து வந்தும் யாசகம் (பிச்சை) எடுக்கும் அதிர்ச்சி சம்பவம் அம்பலமானது.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், சிக்னல்கள் என முக்கிய பகுதிகளில் இளம் பெண்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு பொதுமக்கள், பக்தர்கள் என அனைத்து தரப்பினரிடமும் யாசகம் (பிச்சை) எடுத்து வந்தனர். இதில் சில பெண்களின் தோற்றத்திற்கும், வைத்திருக்கும் குழந்தைகளின் தோற்றத்திற்கும் பெருத்த வித்தியாசம் இருந்ததால் அந்தப்பெண்களிடம் நெருங்கி விசாரித்தபோது, அவர்கள் அங்கிருந்து குழந்தைகளுடன் தெறித்து ஓடினர்.
இதுகுறித்த தகவல் காவல் துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் விரைந்து சென்று களஆய்வு மேற்கொண்டனர். அப்போது காவல்துறை அதிகாரிகளைக் கண்டதும் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து வந்த பெண்களில் சிலர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இந்தநிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, உத்தரவின்பேரில், திருச்சி மாநகரில் ஆதரவற்ற நிலையில் முக்கிய சந்திப்புகள், சிக்னல்கள் மற்றும் சாலையில் பிச்சை எடுத்து வருபவர்களை மீட்டு காப்பங்களில் ஒப்படைக்க திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், போக்குவரத்து உதவி ஆணையர் மற்றும் சரக உதவி ஆணையர்கள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி, திருச்சி மாநகர குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு, குழந்தைகள் நலகுழுமம் ஆகியோர் நடத்திய சோதனையில் திருச்சி ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம் பகுதிகளில் குழந்தைகளை வைத்து யாசகம் செய்து வந்த பண்ணாரி (23) (பொம்மை வியாபாரம்) என்பவர் 1 வயது பெண் குழந்தையுடனும், மகாலட்சுமி (22) (பொம்மை வியாபாரம்) என்பவர் 1 வயது ஆண்குழந்தையுடனும்,அம்சவள்ளி, (25) (பொம்மை வியாபாரம்) என்பவர் 12 வயது ஆண்குழந்தையுடனும், இந்திரா (27) என்பவர் 3 வயது பெண் குழந்தையுடனும் மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட நான்கு தாய் மற்றும் நான்கு குழந்தைகளும், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள "சொந்தம்" குழந்தைகள் காப்பகத்தில் நல்ல முறையில் ஒப்படைக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையின்பேரில், குழந்தைகள் நல குழும அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில், இவர்கள் அனைவரும் திருச்சி மாவட்டம், நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களது சொந்த குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து வருவது உண்மையெனவும் தெரியவந்தது.
"திருச்சி மாநகரில் இதுபோன்று ஆதரவற்ற நிலையில் முக்கிய சந்திப்பு சிக்னல்கள் மற்றும் சாலையில் பிச்சை எடுத்து வருபவர்களை அவர்களின் மறுவாழ்விற்காக தொடர்ந்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, காப்பங்களில் ஒப்படைக்கப்படுவார்கள்" என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி எச்சரித்துள்ளார்.
முன்னதாக, நேற்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த நிலையில் இவர்களிடம் யாசகம் பெற பல பெண்கள் குழந்தைகளை ரூ.500-க்கு வாடகைக்கு எடுத்து வந்து குழந்தைகளை இடுப்பிலும், கையிலும் சுமந்து பிச்சை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
- ஷானு