திருச்சி: வங்கியால் வந்த வினை - உயிரை பறித்த ரூ.2 லட்சம் - என்ன நடந்தது?

வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் பணம் மாற்றி வரவு வைக்கப்பட்டிருந்தது
பணம்
பணம்

திருச்சி மண்ணச்சநல்லூரில் வங்கியில் 2 லட்சம் ரூபாய் பணம் மாற்றி வரவு வைக்கப்பட்ட விவகாரத்தில், வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மண்ணச்சநல்லூர் நெய்வேலி தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் (54). காய்கறி வியாபாரியான இவர், முசிறியில் உள்ள ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அவ்வப்போது பண பரிவர்த்தனை செய்து வந்தார்.

இந்த நிலையில், ஒரு நாள் அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அவரது வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் வரவு வைக்கப்பட்டிருந்தது. இந்த தொகையை திரும்ப வங்கி நிர்வாகம் கேட்கும் என நினைத்து சிறிது காலம் காத்திருந்தார். ஆனால் யாரும் பணத்தை திருப்பி கேட்கவில்லை.

இதனால், அந்த பணத்தை எடுத்து தாராளமாக செலவு செய்தார். ஒரு கட்டத்தில் ரூ.2 லட்சமும் கரைந்து போனது. இது நடந்து முடிந்து ஒரு வருடம் ஆன நிலையில், இன்ப அதிர்ச்சி கொடுத்த அதே வங்கியில் இருந்து பேரிடி அவருக்கு வந்தது.

சம்பந்தப்பட்ட வங்கியில் இருந்து அவரது வீட்டிற்கு வந்த மேனேஜர், மாற்றி வரவு வைக்கப்பட்டுவிட்டதாகவும், பணத்தை திருப்பி தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த வியாபாரி முருகேசன், '2 லட்சத்திற்கு நான் எங்கே போவேன்?' என்று கலங்கி போய் உள்ளார்.

இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர் செய்வதறியாது திகைத்துள்ளார். 2 லட்சத்தை திருப்பி தருவது என்பது ஆகாத காரியம் என்று உணர்ந்த அவர், மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து, முருகேசனின் மனைவி கலா, வாத்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவறுதலாக வங்கி கணக்கில் வந்த பணத்தை செலவழித்து விட்டு திரும்ப செலுத்த இயலாமல் வியாபாரி தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

- திருச்சி ஷானு

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com