திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட டிக்கெட் பரிசோதகர்கள், திருச்சி ரயில்வே கோட்ட வணிக நிர்வாகத்தைக் கண்டித்து கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிந்து போராட்டம் நடத்தினர்.
திருச்சி கோட்ட வணிக மேலாளர் போதிய அளவு அபராதம் விதிக்கவில்லை என்று தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பயணப்படி உள்ளிட்ட பணப்பலன்களை முடக்குவதாகவும் பணியில் தகுதி குறைப்பு செய்து பணி மூப்பில் இளையவர்களுடன் இணைத்துப் பணி செய்ய வைப்பதாகவும் வடமாநிலத்திலிருந்து வந்து பணிபுரிபவர்கள் ஊருக்குப் போய் வர வேண்டிய அளவுக்கு விடுப்பு கேட்டால் விடுப்பு தருவதில்லை என்றும் அவர்கள் கூட்டம் குற்றம் சாட்டினர்.
"முன்பெல்லாம் இரண்டு கோச்சுகளுக்குத் தான் ஒரு பரிசோதகர் பணி செய்வார். அதை இப்போது 5 கோச்சுகளாக உயர்த்தி விட்டார்கள். அதேபோல் முன்பதிவு கவுண்டர்களில் பணி புரியும் நபர்களின் எண்ணிக்கை குறைத்து, அதையும் எங்களையே செய்ய வைக்கிறார்கள். இப்படி ஒட்டுமொத்தமாக ரயில்வே துறைக்குச் செலவைக் குறைத்துக் காட்டி தனக்கு வரவேண்டிய பதவி உயர்வை உறுதி செய்து கொள்வதற்காக எங்கள் வாழ்க்கையை அவர் பணயம் வைக்கிறார்.
வடமாநிலங்களைப் போல தென் மாநிலங்களில் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்கள் மிக மிக குறைவு. அதனால், அவர்களுக்கு அபராதம் விதிக்க வழி இல்லை, வாய்ப்பில்லை. அதேபோல் இப்போதெல்லாம் பயணிகள் பயணத்தின் போது தங்களுக்கான அடையாள அட்டை உள்ளிட்டவற்றை முறையாகக் கையில் வைத்திருக்கிறார்கள். எந்த தவறும் செய்வதில்லை. அப்படி இருக்க அவர்களுக்கு எப்படி நாங்கள் அபராதம் விதித்து ரயில்வேக்கான வருமானத்தைப் பெருக்க முடியும்? எங்கள் கோட்ட வணிக மேலாளர் செந்தில்குமாரின் நெருக்கடியால் பலர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருக்கிறார்கள். யாரும் நிம்மதியாக இல்லை. 'உனக்கெல்லாம் எதற்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கவேண்டும்? உனக்கு லீவு தேவையா? நீ வா போ' என்றெல்லாம் ஒருமையில் பேசி எங்களை அவமானம் செய்கிறார்" என்று அவர்கள் கோட்ட வணிக மேலாளர் செந்தில்குமார் மீது குற்றம் சாட்டினர்.
இது குறித்து திருச்சி ரயில்வே கோட்ட வணிக மேலாளர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, "ஒரு நாளைக்கு 4000 ரூபாய் சம்பளம் வாங்குகிறவர்கள் ஒரு நாளைக்கு 100 ரூபாய் வருமானம் ஈட்டி தருகிறார்கள். இந்தப் போராட்டம் கூட எல்லோரும் நடத்தவில்லை. குறிப்பிட்ட ஐந்து பேர் தான் இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள். அதிலும் இரண்டு பேர் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து விட்டார்கள். மற்றவர்கள் பணி புரியும்போது அதே இடத்தில் 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறார்கள்.
இவர்கள் மிகக் குறைவாக அபராதம் விதிக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? வேலையை ஒழுங்காகச் செய்யச் சொன்னால் அதிகாரிக்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள். இதையெல்லாம் நீங்கள் ஒரு செய்தியாகவே கருதாதீர்கள்" என்றார் அவர்.
மக்கள் பாவம்...
- ஷானு