திருச்சி: அதிகாரிகளின் அலட்சியத்தால் 3 சிறுவர்கள் உயிரிழப்பு - என்ன நடந்தது?

விபத்துக்கு காரணமான பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
உயிரிழந்த சிறுவர்கள்
உயிரிழந்த சிறுவர்கள்

காவிரியில் வந்த நீர், திடீரென கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஸ்ரீரங்கம் வேத பாடசாலையைச் சேர்ந்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் ஸ்ரீரங்கம் பகுதி மக்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த திருச்சியையும் கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

என்ன நடந்தது என்பதை விளக்கி சொன்னார் ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கத்தின் தலைவர் மோகன்ராம். "திருவரம்பூர் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக காவிரி ஆற்றில் கம்பரசம் பேட்டை பகுதியில் போர் போடும் வேலை நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு இடையூறு ஏற்படும் என கருதி காவிரி நதியில் வர வேண்டிய நீரை கொள்ளிடத்துக்கு எவ்வித முன் அறிவிப்பும் இன்றி தற்காலிகமாக திருப்பி விட்டதில் வெள்ளம் பெருகி விபத்து நடந்துள்ளது.

ஸ்ரீரங்கம் பத்ரி ஆடிட்டர் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 'பட்டர் குழாம் ' வேத பாடசாலையின் மாணவர்கள் நான்கு பேர் தங்கள் வழக்கமான முறைப்படி யாத்ரி நிவாஸ் எதிரே உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் அதிகாலை 5 மணிக்கு குளிக்க போயிருக்கிறார்கள். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென வந்த வெள்ளத்தில் சிக்கி 4 பேர் தண்ணீரில் மூழ்கியதில் ஒருவர் மட்டும் தப்பிக்க மீதி 3 சிறுவர்கள் இறந்துள்ளனர். விஷ்ணு பிரசாத், ஹரி பிரசாத், அபிராம் ஆகிய 14 வயதான மூன்று சிறுவர்களின் உயிர் அநியாயமாக பறிபோயிருக்கிறது.

பத்திரிகையாளர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்ட பிறகு மீண்டும் தற்காலிகமாக தண்ணீர் திறப்பதை நிறுத்தி இருக்கிறார்கள் யாரோ ஒரு ஒப்பந்ததாரரின் ஆதாயத்திற்காக இப்படி விதிகளை மீறி அஜாக்கிரதையாக செயல்பட்ட அரசு அதிகாரிகளின் செயலால் மூன்று உயிர்கள் பறிபோய் இருக்கின்றன.

கள்ளச்சாராயம் குடித்து செத்தவர்களின் உயிருக்கு நேரில் போய் பார்த்து 10 லட்சம் தர மனம் இருக்கும் முதலமைச்சருக்கு அப்பாவியாய், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் இறந்து போன மூன்று உயிர்களுக்கு ஒரு இரங்கல் செய்தி கொடுக்க கூட மனமில்லை நேரமில்லை.

அங்கே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார், ஆய்வாளர்கள் பந்தாடப்படுகிறார்கள். அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்கிறது. இங்கே அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை இல்லை. அரசுக்கு வருவாய் தரும் துறை சார்ந்த பிரச்சனை என்பதால் இத்தகைய அக்கறை காட்டுகிறதா அரசு? மக்கள் சாராயக் கடைகளுக்கு எதிராக தன் எழுச்சியாக வந்து போராட துவங்கி விடுவார்கள் என்பதால் அந்த தீயை அணைப்பதற்கு இந்த 10 லட்சம் விலை வைக்கப்படுகிறதா என்கிற கேள்வி எல்லாம் எழுகிறது.

இதுகுறித்து பத்திரிகைகளும் மௌனம் சாதிப்பது வேதனைக்குரிய விஷயம்.இந்த விபத்துக்கு காரணமான பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இறந்த போனவர்களுக்கு நிவாரணம் தருவதில் கூட பாரபட்ச காட்டும் இந்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் அவர்.

- ஷானு

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com