கடலூர்-சிதம்பரம் மார்க்கத்தில் பரங்கிப்பேட்டை வழியாக செல்லும் பல தனியார் பேருந்துகள் பரங்கிப்பேட்டையை புறக்கணித்து கொத்தட்டை வழியாக செல்வதுடன், பரங்கிப்பேட்டை என பயணச்சீட்டு கொடுக்காமலும், ‘வழி: பரங்கிப்பேட்டை’ என்று தகவல் பலகை வைக்காமலும் மற்றும் பயணச்சீட்டில் பல்வேறு மோசடிகளை அரங்கேற்றி வருவதாகவும் பொதுமக்கள் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் முறையிட்டு வந்தனர்.
இதையடுத்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பல நேரங்களில் திடீர் சோதனை செய்து நடவடிக்கைகள் எடுத்தாலும், தனியார் பேருந்துகள் எந்த விதத்திலும் தங்களை மாற்றிக் கொள்ளவே தயாராக இல்லை என்பதுபோல் செயல்பட்டு வந்தன.
இதை தொடர்ந்து அவர்கள் தங்களின் முறைகேடுகளை நியாயப்படுத்துவதுடன் அதையே செய்து பயணிகளுக்கு பல்வேறு வகையில் தொடர்ந்து பிரச்னை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பரங்கிப்பேட்டை வழியாக வந்த சாய்பாபா மற்றும் கிருஷ்ணா என்ற 2 தனியார் பேருந்துகளை திடீரென நிறுத்தி சிதம்பரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விமலா அதிரடி சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது பயணச்சீட்டில் முறைகேடு செய்து வருவதும், பேருந்துகளில் நடைமுறைப்படுத்த வேண்டிய பல்வேறு அரசு உத்தரவுகளை பயன்படுத்தாமல் இருப்பதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இனியும் அப்படி தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விமலா எச்சரிக்கை விடுத்தார்.
அதேப்போல் பேருந்தில் இருந்த குறைபாடுகளை ஆய்வாளர் விமலா சுட்டிக்காட்டினார். பயணிகள் ஏறும் படிக்கட்டில் உடைப்பு ஏற்பட்டிருந்தது. படிக்கட்டு கைப்பிடி இல்லாமலும், ஜன்னல் கண்ணாடிகள் இல்லாமல் இயக்கியது என பல்வேறு குறைபாடுகள் இருந்ததால் பேருந்தை சிறைபிடிப்பதாக தெரிவித்தார்.
தனியார் பேருந்துகளின் அடாவடி தொடர்பான பயணிகளின் கோரிக்கையை ஏற்று சிதம்பரம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் விமலா அதிரடி சோதனை நடத்தி பஸ்சை சிறை பிடித்தது பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.