கண்டெய்னரில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்தல்- மத போதகர் உட்பட 3 பேர் கைது

கஞ்சாவை தூத்துக்குடி கொண்டு சென்று அங்கிருந்து இலங்கைக்கு கடத்த முயற்சி செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
கஞ்சா கடத்திய கைதான 3 பேர்
கஞ்சா கடத்திய கைதான 3 பேர்

கண்டெய்னரில் ரகசிய அறை அமைத்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா கடத்திய மத போதகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு சுங்கச்சாவடி பகுதியில் புகையிலை மற்றும் கஞ்சா ஒழிப்பு தனிப்படை காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை பதிவு எண் கொண்ட மினி கண்டெய்னர் லாரி வந்தது.

அந்த லாரியை நிறுத்திய தனிப்படை காவல்துறையினர் கண்டெய்னரை திறக்கச் சொன்னார்கள். கண்டெய்னரைத் திறந்து போலீசார் உள்ளே சென்று சோதனை மேற்கொள்ள முயன்றனர். அப்போது ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணான தகவலை கூறினார்.

உடனே தனிப்படை காவல்துறையினர் கண்டெய்னர் பெட்டியை இன்ச் பை இஞ்சாக சோதனை செய்தனர். அப்போது கண்டெய்னரில் ரகசிய அறை இருந்தது தெரிய வந்தது. அதில் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள கஞ்சா இருந்தது. கஞ்சாவை கைப்பற்றிய போலீசார், லாரியில் வந்த மூன்று பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் கோவில்பட்டி மதுவிலக்குப்பிரிவு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தூத்துக்குடி அருகில் உள்ள ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்த ஜான் அற்புத பாரத், மத போதகராக இருப்பது தெரிய வந்தது. அவருடன் புதுச்சேரி மாநிலம், ஏனாம் பகுதியைச் சேர்ந்த சக்தி பாபு( 39), தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த விஜயகுமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

கண்டெய்னரில் கொண்டுவரப்பட்ட கஞ்சாவின் அளவு 600 கிலோ என்றும், அதன் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாய் என்றும் போலீசார் தெரிவித்தனர். கஞ்சாவை தூத்துக்குடி கொண்டு சென்று அங்கிருந்து இலங்கைக்கு கடத்த முயற்சி செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com