மயிலாடுதுறை அருகே வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தியை குறைந்த விலைக்கு ஏலம் கேட்டதால் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லுக்கு உரிய விலை கிடைக்காமல் போராடி ஓய்ந்து போன விவசாயிகள் மாற்றுப்பயிரான பருத்தி சாகுபடிக்கு மாறினர். ஆனால் பருத்திக்கும் உரிய விலை கிடைக்காமல் போராடவேண்டிய சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருப்பது வேதனையான விஷயம்தான்.
மயிலாடுதுறை அருகே குத்தாலம் பகுதியில் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த விற்பனைக்கூடத்தை மட்டுமே நம்பியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் நடப்பாண்டில் 6 ஆயிரத்து 500 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடைப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் பருத்திகள் 100 கிலோ மூட்டைகளாக வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு எடுத்துவரப்படுகிறது. இங்கு திருப்பூர், மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வருகை தரும் வியாபாரிகள் மறைமுக ஏல முறையில் பருத்தியை கொள்முதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் குத்தாலம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்க சுற்றுப்பகுதிகளிலுள்ள சுமார் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது பருத்தியை எடுத்துவந்து காலை முதல் காத்திருந்தனர். ஏலம் தொடங்கியவுடன் அதிகாரிகள் ஆதரவுடன் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு ஏலம் கேட்கின்றனர். இதனால், கொதித்துப்போன விவசாயிகள் மயிலாடுதுறை- கும்பகோணம் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேசினோம். “இந்த ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.7080க்கும், குறைந்த பட்சமாக ரூ.5800க்கும் வியாபாரிகளால் ஏலம் கேட்கப்பட்டது.
இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். கடந்த ஆண்டில் ஒரு குவிண்டால் பருத்தியானது ரூ.8000க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வருடம் வேளாண் அதிகாரிகள் ஆதரவுடன் வியாபாரிகள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து மோசடி செய்யும் விதமாக குறைந்த விலைக்கு கேட்கின்றனர். உரம் விலை, ஆட்கள் கூலி, வண்டி வாடகை செலவு ஆகியவை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் எங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுவது மாதிரி விலையை நிர்ணயம் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். இதனால்தான் ஏலத்தை புறக்கணித்து சாலைமறியல் போராட்டம் செய்துவருகிறோம்”என்றனர் கோபக்குரலில்.
இரவு 7 மணிக்கு தொடங்கிய போராட்டம் 10 மணி வரை தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் வேளாண் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ”அடுத்த முறை ஏலத்தின் போது வியாபாரிடம் இது குறித்து பேசுகிறோம்” என்று உறுதியளித்ததன் அடிப்படையில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக மயிலாடுதுறை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்களும், பயணிகள் கடும் அவஸ்தைக்கு உள்ளாகினர்.
குத்தாலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆரோக்கியசாமியிடம் பேசினோம். “பருத்தி ஏலத்தில் சிண்டிகேட் என்பதற்கு வேலையே கிடையாது. பருத்தி விலை குறைவாக ஏலம் கேட்பதற்கு ஜவுளி தேக்கம், மற்றும் விலை வீழ்ச்சி ஆகியவை காரணமாக சொல்லப்பட்டது. விஸ்கோஸ் கலக்கப்பட்ட பருத்தி குறைவாக விலைக்கு கிடைப்பதாலும் ஒரிஜினல் பருத்தியை விலை அதிகம் கொடுத்து வாங்குவதற்கு வியாபாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். இது தொடர்பாக நடைபெற்ற சமாதானக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு நிலைமையை விளக்கி எடுத்துகூறியவுடன் அவர்களும் சம்மதித்து தங்கள் பருத்தியை விற்பனை செய்திருக்கின்றனர். தற்போது பிரச்னை எதுவும் இல்லை” என்றார்.
-ஆர்.விவேக் ஆனந்தன்