‘ரவுடியாக மாறி வரும் நரிக்குறவ பெண் அஸ்வினி’ - வியாபாரிகள் அதிர்ச்சி புகார்

நரிக்குறவ பெண் அஸ்வினி ரவுடியாக மாறி வருவதாக வியாபாரிகள் அதிர்ச்சி புகார் அளித்துள்ளனர்.
அஸ்வினி
அஸ்வினி

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலில் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தை சாப்பிடுவதற்காக கடந்த ஆண்டு பூஞ்சேரி நரிக்குறவர் பகுதியை சேர்ந்த அஸ்வினி மற்றும் அதே சமுதாயத்தை சேர்ந்த சிலர் சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் பந்தியில் அமர்ந்து சாப்பிட முயன்றபோது கோயில் நிர்வாகத்தினரால் விரட்டி அடிக்கப்பட்டனர். இதனால் மனமுடைந்த நரிக்குறவ பெண் அஸ்வினி தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து யூடியூப் மூலம் தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அமைச்சர் சேகர் பாபு நரிக்குறவர் பெண் அஸ்வினியுடன் கோவிலில் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஸ்வினியை அழைத்து பேசினார். மேலும் அஸ்வினியின் வீட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றிருந்தார்.

இதன் எதிரொலியாக நரிக்குறவர் இன மக்களுக்கு பல்வேறு உதவிகள் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டது. இதன் காரணமாக அஸ்வினி மிக பிரபலமாக பேசப்பட்டார்.

இந்நிலையில் மாமல்லபுரம் பகுதியில் உள்ள உணவகத்தில் 10 ரூபாய்க்கு சப்பாத்தி, பரோட்டா வழங்குமாறு கேட்டு மிரட்டுவதாகவும், தர மறுத்தால் கத்தியை காட்டி மிரட்டுவதாக அப்பகுதி வியாபாரிகள் நரிக்குறவர் பெண் அஸ்வினி மீது காவல் நிலையத்துல் புகாரளித்து இருந்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதோடு, இரு தரப்பினரையும் அழைத்து பேசி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்து இருந்தனர். இந்நிலையில் மீண்டும் வியாபாரிகளை நரிக்குறவ பெண் அஸ்வினி மிரட்டுவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நரிக்குறவ பெண் அஸ்வினி மீது மாமல்லபுரம் காவல் நிலையத்தில் அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் புகார் அளித்து உள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மாமல்லபுரம் பகுதி வியாபாரிகள் கூறுகையில், ‘நரிக்குறவ பெண் அஸ்வினி தனக்கு வழங்கப்பட்டுள்ள கடையில், பாசி மணி விற்காமல் அருகில் இருக்கும் கடைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார். இதுகுறித்து யாராவது கேட்டால் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பெயரைச் சொல்லி மிரட்டுகிறார்.

அஸ்வினி யாராலும் கட்டுப்படுத்த முடியாத பெண்மணியாக பேசி வருகிறார். யாராவது அவரை தட்டிக்கேட்டால் எஸ்.பி ஆபீசுக்கு போய் எஸ்.சி., எஸ்.டி பிரிவில் புகார் அளித்து விடுகிறார்.

காவல்துறையினர் உள்பட பலரும் அவரை பார்த்து பயப்படுகின்றனர். மாமல்லபுரத்தில் வளர்ந்து வரும் பெண் ரவுடியாக அஸ்வினி பார்க்கப்படுகிறார்’ என கூறினர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com