கொடைக்கானலில் இருந்து பழனி வழியாக வந்த சுற்றுலா வேன் ஒன்று 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 21 பேர் காயமடைந்த நிலையில், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்
கோடை விடுமுறையையொட்டி குடும்பத்துடன் மன்னார்குடியில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மூன்று நாட்கள் சுற்றுபயணமாக மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றுவிட்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு சுற்றிப்பார்த்து முடித்து விட்டு பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக பிரயாணப்பட்டுள்ளனர். அப்போது பழனி மலைசாலை வழியாக வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக வேன் பாறையின் மீது மோதி ஐந்தாவது கொண்டை ஊசி வளைவில் பிரேக் பிடிக்காமல் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததுள்ளது.
இதனால் நிலைத்தடுமாறிய வேன் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், சாலையில் சென்ற வாகன ஓட்டிகளின் உதவியுடன் கயிற்றைக் கட்டி அனைவரையும் மேலே கொண்டு வந்து மீட்டனர்.
இந்த விபத்தில் தஞ்சாவூரை சேர்ந்த மாரியம்மாள் (45) என்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த நிலையில் இரண்டு ஆண்கள், 16பெண்கள், 3 குழந்தைகள் ஆகியோர் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலமாக பழனி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்துக் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.