தமிழகத்தில் வரும் 18ம் தேதி விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்படுகிறது.இதையொட்டி நெல்லையில் இந்து முன்னணி சார்பில் சுமார் 300 இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட இருக்கிறது.பின்னர் அனைத்து விநாயகர் சிலைகளும் தாமிரபரணியில் கரைக்கப்படும்.
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு பாளையங்கோட்டை கிருபா நகரில் விநாயகர் சிலை தயாரிப்பு கூடம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் இங்கு தங்கிருந்து பல வடிவங்களில் விநாயகர் சிலைகளை செய்து வருகிறார்கள்.
இந்த சிலை தயாரிப்பு கூடத்திற்கு திடீரென வந்த மாநகராட்சி அதிகாரிகளும், மாசுக்கட்டுப் பாட்டு அதிகாரிகளும் சிலை தயாரிக்கும் இடத்தை பார்வையிட்டதோடு, சிலை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டர் ஆஃப் பாரீசையும் சோதனைக்காக எடுத்துச் சென்றனர். அவர்கள் சென்ற சில மணி நேரத்தில் உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப் தலைமையில் அங்கு வந்து சிலை தயாரிக்கும் பணியை நிறுத்தியதோடு, சிலை தயாரிப்பு கூடத்தை இழுத்துப் பூட்டினர்.
வடமாநில தொழிலாளர்கல் உள்ளேயே சிக்கி கொண்டனர். இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட இந்து முன்னணி மாநிலத் துணைத்தலைவர் ஜெயக்குமார், மாநிலச் செயலாளர் வக்கீல் குற்றாலநாதன் ஆகியோர் அங்கு வந்து சிலை தயார் செய்யும் கூடத்தை திறக்க முயற்சி செய்தனர். இதை அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸ் தடுத்தது. உடனடியாய் அவர்கள் போலீசுக்கு எதிராய் கோஷம் போட்டனர்.
வக்கீல் குற்றாலநாதன் கூறுகையில், ”கடந்த இருபது ஆண்டுகளாய் வடமாநிலத் தொழிலாளர்கள் நெல்லை வந்து விநாயகர் சிலைகளை தயார் செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு அமைச்சர் உதயநிதி தூண்டுதலின் பேரில் போலீசார் விநாயகர் ஊர்வலத்தை நீர்த்து போகச் செய்வதற்காக கூடத்தை பூட்டி சில் வைத்திருக்கிறார்கள். இதை இந்து முன்னணி எதிர்கொள்ளும்” என்றார்.
இது குறித்து இன்ஸ்பெடர் ராமனிடம் பேசியபோது, ”ஏராளமான விநாயகர் சிலைகள் தாமிரபரணியில் கரைக்கப்பட இருப்பதால் சிலையில் ரசாயனம் ஏதும் கலந்திருக்கிறதா என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய மாதிரிகளை எடுத்துச் சென்றிருக்கிறது. அதன் ரிசல்ட் வரும் வரை சிலை தயாரிக்க வேண்டாம் என்று தொழிலாளர்களை கேட்டு கொண்டிருக்கிறோம்” என்றார்.