கோவை போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள வாக்கி டாக்கிகள் பழுதாகி உள்ளதால் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருடர்களுக்கு போலீஸின் யூனிஃபார்ம், மீசை, லத்தி, துப்பாக்கி இவற்றுக்கு நிகராக அவர்கள் கையில் இருக்கும் கரகரப்பான சத்தம் எழுப்பும் வாக்கி டாக்கியை பார்த்தால் வயிறு கலங்கும். காரணம் போலீஸாரின் கெத்தான அடையாளங்களில் அதுவும் ஒன்று, அதிலும் மிக முக்கியமான ஒன்று. ஏனென்றால் குற்றமோ, விபத்தோ எதுவாகினும் உடனுக்குடன் சக போலீஸுக்கு தகவல் தர உதவுவது அதுதானே. குற்றவாளிகளை பிடிக்க உதவும் உபகரணங்களில் மிக முக்கியமானது இந்த வாக்கிடாக்கி தானே!
அப்பேர்ப்பட்ட வாக்கி டாக்கி அடிக்கடி மக்கர் செய்தால்?....இப்படித்தான் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது கோவை மாவட்ட போலீஸ். அதாவது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கீழ் முப்பத்தாறு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. அப்படியானால் அவரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள போலீஸ் ஸ்ட்ரென்த்தின் எண்ணிக்கையை யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் போலீஸாரின் எண்ணிக்கையைப் பொறுத்து வாக்கி டாக்கி அரசால் வழங்கப்படும். அதி முக்கியமான இந்த வாக்கி டாக்கியானது கோவை மாவட்டத்தில் பரவலாக சில போலீஸ் ஸ்டேஷன்களில் சரியாக வேலை பார்ப்பதில்லை, பழுதாகி இருக்கிறது, பேச்சு தெளிவற்ற நிலையில் கேட்கிறது என்றெல்லாம் சர்ச்சை சலசலப்புகள் கிளம்பியுள்ளன.
இதுபற்றி புலம்பும் சில போலீஸார் “எங்கள் துறைக்கு மிக அத்தியாவசிய சாதனமான வாக்கி டாக்கி சரியா இயங்காத காரணத்தால கொஞ்ச நாளாவே ரொம்ப அவதிப்படுறோம். இதை நாங்களே வெளியில எங்கேயும் பழுது பார்க்க கொடுக்க முடியாது, கூடாது. எங்களோட டெக்னிக்கல் டிபார்ட்மெண்ட்லதான் கொடுத்து வாங்கணும். அப்படி கொடுத்த நேரத்துல மாற்று வாக்கி டாக்கியும் கிடைக்கிறதில்லை. இதனால எங்களோட பர்ஃபார்மென்ஸ்ல உருவாகுற சிக்கல்களை சொல்லி முடியலை” என்கிறார்கள்.
இது குறித்து விளக்கம் தரும் கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணனோ, “மாவட்டத்தில் மட்டுமில்லை பரவலா வாக்கி டாக்கி பிரச்னை இருக்குது (ஓ சிட்டி போலீஸிலும் இந்த சிக்கல்தானா சார்?) அரசாங்கத்திடம் நூறு வாக்கி டாக்கி பேட்டரிகளை கேட்டுள்ளோம் . அவை கிடைச்சதும் உடனடியாக வழங்கப்படும். பேட்டரியில்தான் பிரச்னை, சிக்னலில் பிரச்னை இருப்பதாக புகார் இல்லையே! இருந்தாலும் விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
விருது பெற்ற ஆஃபிஸர்! விரைந்து நடவடிக்கை எடுங்க சார்.
-ஷக்தி