திருவாரூர் அருகே விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த பழங்கால ஐம்பொன் சிலைகள், செம்பு நாணயங்கள், காலச்சக்கரம் ஆகியவற்றை போலீசார் மீட்டுள்ளனர். இதுதொடர்பாக தந்தை, மகனை கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் கடைத்தெருவில் வசித்து வருபவர் கண்ணன். இவருடைய மகன் சூர்யபிரகாஷ். இவர்கள் இருவரும் தங்கள் வீட்டிலேயே மெஸ் ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்கள் பழங்காலச் சிலைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருவதாகவும், தற்போது இவர்கள் வீட்டில் விற்பனைக்காகச் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் திருச்சி சிலை திருட்டுத் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
இதனையடுத்து, திருச்சி சிலை திருட்டுத் தடுப்புப் பிரிவு போலீசார் சிலர் கண்ணன் வீட்டுக்கு வந்து சிலை வாங்குவதுபோல் நடித்துள்ளனர். அப்போது சிலைகள் இருப்பதை உறுதி செய்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, திருச்சி சிலை திருட்டுத் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் இந்திரா, கும்பகோணம் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் லக்குமணன் மற்றும் போலீசார் கண்ணன் வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் பல கோடி ரூபாய் மதிக்கத்தக்க ஐம்பொன்னால் ஆன தன்வந்திரி சிலை, 15 அடி உயரமுள்ள ராக்காயி அம்மன் வெண்கல சிலை, 1010 ஆண்டுகள் பழமையான முக்கால் கிலோ எடையுள்ள இரண்டு செப்பு நாணயங்கள், காலச்சக்கரம் ஆகியன இருந்தது தெரியவந்ததையடுத்து, அவைகள் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தந்தை கண்ணன், மகன் சூர்யபிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
திருச்சி சிலை திருட்டுத் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் இந்திராவிடம் பேசினோம். “கைப்பற்றப்பட்ட சிலைகள் உள்ளிட்ட பழங்காலப் பொருட்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி திருமைக்கோட்டையில் அகஸ்தியர் கோவில் கட்டுமானப்பணி நடைபெற்று வருவதாகவும், கூறியவர்கள் அந்தக் கோவிலைச்சேர்ந்த மாரியப்பன் என்பவரிடமிருந்து சிலை மற்றும் செப்பு நாணயங்களை வாங்கி விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தி இவைகளைப் பறிமுதல் செய்துள்ளோம்.இருவர் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
இதற்கிடையே நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களில் உள்ள பழமையான கோவில்களில் உள்ள சிலைகளின் உண்மை தன்மை குறித்துச் சிலை திருட்டுத் தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடியாகச் சோதனை நடத்த வேண்டும். சமீபத்தில் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள வீரட்டேசுவர கோவிலில் இதுபோல் சிலைகளின் உண்மைத்தன்மை குறித்த ஆய்வு நடத்தப்பட்டதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தட்சிணாமூர்த்தி சுவாமி சிலை திருடுபோனது தெரியவந்தது. அதனை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுபோல் பல கோவில்களில் சிலைகள் திருடு போய் தற்போது போலி சிலைகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சிலை திருட்டுத் தடுப்புப் பிரிவு போலீசார் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஆர்.விவேக் ஆனந்தன்