வெறும் ஜட்டியும், முகமூடியும் மட்டும் அணிந்து வந்து பெண்களிடம் கொள்ளையடித்து வரும் கொள்ளையனை நினைத்து திருவண்ணாமலை மாவட்டம் மக்கள் அஞ்சி கிடக்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சென்னவரம் கிராம பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு தன் மனைவி அலமேலு மற்றும் தாய், மகன், மகளுடன் வெப்பம் காரணமாக கீழ் வீட்டை பூட்டிக் கொண்டு மாடியில் படுத்துக் கொண்டார்கள்.
இந்த நிலையில், அதிகாலை இரண்டரை மணி அளவில் தெரு கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் அறையின் பூட்டை உடைக்கும் பொழுது சத்தம் கேட்டு ரங்கநாதன் மடியில் இருந்து இறங்கி வந்துள்ளார்.
அப்பொழுது, அந்த கொள்ளையன் அவர் சத்தம் கேட்டு தப்பித்து செல்ல முயன்றுள்ளான். அவனை பிடிக்க ரங்கநாதன் முயற்சிக்க அவரை சுவற்றில் மோதி கீழே தள்ளிவிட்டு, கையில் இருந்த இரும்பு ராடால் தாக்கியுள்ளான், அப்போதுதான் அவன் வெறும் ஜட்டி மற்றும் முக முடியுடன் இருந்ததை ரங்கநாதன் பார்த்துள்ளார்.
அங்கிருந்து ஒரு கி.மீ. தூரம் ஓடிய ஜட்டி கொள்ளையன் பஸ் நிலையம் அருகே உள்ள மெக்கானிக் பிரபு என்பவரின் வீட்டுக்குள் இரும்பு கிரில் கதவு திறந்திருக்கவே அந்த வீட்டின் உள்ளே சென்றிருக்கிறான். அன்று மெக்கானிக் பிரபுவின் மகள் சசிகலாவுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடிவிட்டு உறவினர்கள் காத்து வசதிக்காக கிரில் கதவை பூட்டாமல் உறங்கியிருக்கிறார்கள்.
திடீரென்று, கண் விழித்த பிரபுவின் மனைவி ஜெயந்தி மர்ம நபர் ஜட்டியுடன் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அனைவரும் கண் விழிந்துள்ளனர். அப்பொழுது, அந்த ஜட்டி கொள்ளையன், என்னைத் தொட்டால் உங்களுடைய உயிர் இருக்காது. என மிரட்டியபடி பிரபுவின் மாமியார் அணிந்திருந்த இரண்டு பவுன் செயினை பறித்துள்ளான். பிடிக்கச் சென்ற பிரபுவின் கையை கத்தியால் வெட்டி உள்ளான்.
இது குறித்து, வந்தவாசி போலீசில் ரங்கநாதனும், கோபியும் தனித்தனியாக புகார் அளித்துள்ளார். அதன்பேரில் டி.எஸ்.பி. கார்த்திக் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஜட்டிக் கொள்ளையனை தேடி வருகின்றனர்.
- அன்பு வேலாயுதம்