திருவள்ளுர் அடுத்த நேமம் பகுதியில் உள்ள சாக்லேட் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க கோரியும், ஊதிய உயர்வு உயர்த்தி வழங்க கோரியும் இன்று 30-வது நாளாக தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் நேமம் பகுதியில் அமைந்துள்ள லோட்டே சாக்கோபை சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலையில் சுமார் 60 நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றினர்.
இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் நிரந்தர தொழிலாளர்கள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தொழிற்சங்க நிர்வாகிகள் சிலரை நிர்வாகம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது
இதை கண்டித்து, சக தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க கோரியும், ஊதிய உயர்வு உயர்த்தி வழங்க கோரியும் பணி புறக்கணிப்பு செய்து கடந்த 29 நாட்களாக தொழிற்சாலை முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று 30-வது நாளாக தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பச்சிளம் குழந்தைகளுடன் சுட்டெரிக்கும் வெயிலும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பூந்தமல்லி வட்டாட்சியர் மாலினி பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நிர்வாகத்துடன் பேசி சுமுக முடிவு எட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.