சட்டத்தை நிலை நாட்ட காவல்துறையும், நிர்வாகமும் ஒரு ரூட்டில் போனால், அதை உடைத்தெறிந்து ஏமாற்றி சம்பாதிக்க குறுக்கு வழியில் பல ரூட்ஸை கண்டுபிடிப்பார்கள் சீட்டிங் பேவழிகள். அந்த வகையில் ‘புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டு திரும்பப்பெறப்படுகிறது’ எனும் தேசிய அறிவிப்பையே வைத்து திருப்பூரில் ஒரு டீமானது லட்சங்களை ஆட்டையப்போட்டுள்ளது. அதுவும் ஒரு லட்சம், ரெண்டு லட்சங்களல்ல முப்பது லட்சம்ப்பே! முப்பது லட்சம்!.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகேயுள்ள காளம்பாளையத்தை சேர்ந்தவர் சபரிநாதன். ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் செய்கிறார்.
அதே ஊரைச்சேர்ந்தவரும், அ.தி.மு.க. இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளரான சந்திரசேகர் மற்றும் கொங்குநாடு ஜனநாயக கழகம் எனும் அமைப்பின் மாநில பொதுசெயலாளரான ஜெயராம் மற்றும் அதன் பொருளாளர் சிவராமன் ஆகியோர் சபரிக்கு ஏற்கனவே அறிமுகமான நபர்கள்.
2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுதல் துவங்கியுள்ள நிலையில் அதை வைத்து சீட்டிங் செய்திட திட்டம் போட்ட இந்த மூவரும் சபரிநாதனிடம் ’இரண்டாயிரம் நோட்டுகளுக்கு பதிலாக ஐநூறு ரூபாய் நோட்டுகளை தந்தால் பத்து சதவீதம் கமிஷன் தருவோம்’ என்று ஸீன் போட்டுள்ளனர்.
இதை நம்பிய சபரிநாதன், கடந்த 24-ம் தேதியன்று திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள வங்கியில் முப்பது லட்சத்துக்கு ஐநூறு ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டு, அதை பெருமாநல்லூரில் உள்ள சந்திரசேகரின் வாடகை வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கே மற்ற இருவரும் இருந்துள்ளனர்.
வீட்டில் வைத்து பணம் எண்ண வேண்டாம் என்று சொல்லி சற்று தள்ளிப் போய் காரில் வைத்து பணத்தை கட் அண்டு ரைட்டாக எண்ணி வாங்கிக் கொண்டவர்கள் ‘இங்கேயே இரு சபரி, இதோ ரெண்டாயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகளை எடுத்துட்டு வர்றோம்’ என்று சென்றவர்கள் அப்புறம் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரமாகியும் வரலை. மூவரின் மொபைலும் ஸ்விட்ச்டு ஆஃப்.
அப்போதுதான் சபரிக்கு அந்த வடிவேல் ஸீன் நினைவுக்கு வந்துள்ளது. ‘பாசத்துல நம்மள மிஞ்சிடுவான் போலயே’ என்று திருடனின் கைவிலங்கை கழட்டிவிட்டு, வீட்டுக் கதவையும் திறந்துவிட்டு அனுப்பிய என்கவுண்ட்டர் ஏகாம்பரமாக தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து அழுதவர் நேரடியாக பெருமாநல்லூர் போலீஸிடம் சென்று புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் ஹேமலதா தலைமையில் களமிறங்கிய டீம் மளமளவென விசாரித்து அ.தி.மு.க. சந்திரசேகரின் வட்டாரத்தில் பேசி அவர்கள் மூவரும் இருக்குமிடத்தை ரவுண்டு கட்டி, அமுக்கினர். கைதான மூன்று பேரும் ‘சபரியிடம் நிறைய பணமிருக்குதுன்னு தெரியும்.
அவசர தேவைக்காக அதை எப்படியாச்சும் வாங்கணும்னு நினைச்சோம். கடனா கேட்டா தரமாட்டார், அதான் இப்படியொரு டிராமா போட்டோம். ஆக்சுவலா ஒரு வாரத்துல திருப்பி தந்து உண்மையை சொல்ல நினைச்சோம், ஆனா அவரு டக்குன்னு போலீஸ்ட்ட வந்துட்டார்’ என்று என்னென்னவோ சொல்லி சமாளித்துப் பார்த்தனர்.
ஆனால், பப்பு வேகாத நிலையில் அவர்கள் ரிமாண்ட் செய்யப்பட்டனர். இதில் கொடுமை என்னவென்றால் லவட்டப்பட்டதில் பாதிப் பணம் மட்டுமே அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மீதியை அதற்குள் செலவு செய்திருந்தனர். அதையும் மீட்க முயற்சி செய்து வருகிறது போலீஸ்.
- கோவை ஷக்தி