திருப்பூர்: பெண் போலீசுக்கு மிரட்டல் - சிக்கலில் தி.மு.க நிர்வாகி

தி.மு.க நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர்: பெண் போலீசுக்கு மிரட்டல் -  சிக்கலில் தி.மு.க நிர்வாகி

’உங்களால என்னோட நிம்மதி போச்சு, தூக்கம் போச்சு’ என்று தி.மு.க. பொதுக்குழுவில் முதல்வர் ஸ்டாலின் ஓப்பனாக வருந்திய பின்னும் திருந்தியபாடில்லை கட்சியினர். அமைச்சர்கள் மட்டுமில்லை கீழ்நிலை நிர்வாகிகளும் கூட ஏதோ அந்தந்த மாவட்டங்களில் ஏதோ ஒரு ரவுசு பண்ணி, கட்சிக்கு கஷ்டத்தைக் கொடுக்கிறார்கள். அந்த வகையில் திருப்பூர் தி.மு.க.வினர் செய்திருக்கும் காரியங்கள் அறிவாலயத்தை கண்சிவக்க வைத்துள்ளது.

அப்படி என்ன நடந்துடுச்சு?

பஞ்சாயத்து 1:

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சமீபத்தில் போக்சோ வழக்கு ஒன்று தொடர்பாக 17 வயது சிறுவனிடம் இன்ஸ்பெக்டர் செல்லம் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது, கொளத்துப்பாளையம் நகர தி.மு.க. செயலாளரான மீசை துரை தன் டீமுடன் ஸ்டேஷனுக்குள் சென்றவர், புகார் தொடர்பாக அந்த சிறுவன் மீது கேஸ் போடக்கூடாது என்று சொல்லியிருக்கிறார். அதற்கு இன்ஸ்பெக்டரோ ‘புகார் வந்திருக்குது, அது தொடர்பா விசாரிக்கிறேன். சட்டப்படிதான் போகுது’ என்று சொல்ல, கடுப்பான மீசை டீம் இன்ஸ்பெக்டர் உட்பட மொத்த ஸ்டேஷன் போலீஸையும் தாறுமாறாக திட்டி, மிரட்டினார்களாம்.

அதிலும் மீசை துரை ஆத்திரத்தின் உச்சம் சென்று ‘தொப்பியை கழட்டிடுவேன்’ என்று போலீஸை மிரட்டிட, ஷாக்காகியுள்ளனர் அவர்கள். இதை சாமர்த்தியமாக ஒருவர் வீடியோ எடுத்து தற்போது வெளியிட, அது வைரலாகி வருகிறது. ‘இதுதான் இரண்டாண்டு திராவிட மாடல் ஆட்சியின் சாதனை’ என்று இணையத்தில் நெட்டிசன்கள் நெத்தியடியாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாம் துரையிடம் பேசுவதற்கு அவரை பல முறை தொடர்பு கொண்டோம் ஆனால் அவரது மொபைல் சுவிட்ச்டு ஆஃப் செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாயத்து 2:

திருப்பூர் மாவட்டத்தில் தி.மு.க. அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு பகுதியில் கடந்த 9-ம் தேதி இரவில் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்காக ஒரு நாள் முன்பாகவே அந்த ஏரியாவின் பள்ளிக்கூட வீதியில் ரோட்டை மறித்து மேடை அமைக்கும் பணி நடந்துள்ளது. இதற்காக பேரிகேட் பயன்படுத்தி ரோட்டை மறித்து மேடைப்பணிகளை செய்துள்ளனராம். இதனால் அந்த வழியே செல்ல வேண்டியவர்கள் சுற்றிச் சுற்றி செல்ல வேண்டியதாகியுள்ளது.

பொதுக்கூட்டத்தில் ’மக்கள் நல ஆட்சி நடக்கிறது’ என்று பேச்சாளர்கள் பேச, ‘ஆமா ரோட்டை மறிச்சு மேடை போட்டுட்டு மக்கள் நல அரசுன்னு எப்படி பேச முடியுது?’ என்று முணுமுணுத்துள்ளனர் பொதுமக்கள்.

தாராபுரம் மீசை துரையின் அதிரடியும், இந்த ரோடு மறிப்பு போட்டோஸும் அறிவாலயத்தின் கவனத்துக்கு செல்ல ‘இவங்க அடங்கவே மாட்டாங்களா? இவங்க பண்ற கூத்தால மக்கள் மத்தியில கட்சிக்குதான் அசிங்கம். என்னதான் நல்ல திட்டங்களை நாம கொண்டு வந்து செயல்படுத்தினாலும், லோக்கல்ல உள்ள இவங்க பண்ற அக்கிரமத்தாலே கட்சி பெயர் கெடுது’ என்று கண் சிவந்து கொதித்துள்ளது தலைமை.

திருப்பூர் மாவட்டத்தில் இப்படி ஆட்டம் போட்ட தி.மு.க.வினர் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! எனும் கோரிக்கை எழுந்துள்ளது. கழகபொதுச்செயலாளர் துரைமுருகனின் பார்வைக்கே இதை அனுப்பிவைத்துள்ளனராம்.

என்ன நடக்குதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்!

-ஷக்தி

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com