திருப்பத்தூர்: கணவன் கண்முன்னே 100 அடி விவசாய கிணற்றில் குதித்து பெண் தற்கொலை- காரணம் என்ன?

ஆலங்காயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர்: கணவன் கண்முன்னே 100 அடி விவசாய கிணற்றில் குதித்து பெண் தற்கொலை- காரணம் என்ன?

வாணியம்பாடி அருகே கணவன் கண்முன்னே 100 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், பச்சூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா(27). இவருக்கும் சரளா(24) என்ற பெண்ணுக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 ஆண் மற்றும் 1 பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், சரளா தன் கணவருக்குத் தெரியாமல் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடி அடுத்த ரெடியூர் அருகே உள்ள சின்னசாமி வட்டத்தைச் சேர்ந்த உறவினர் சூர்யா என்பவரிடம் 2 சவரன் தங்க நகை மற்றும் ரூ.80 ஆயிரம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு சரளாவின் கணவருக்குத் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இன்று சரளா தன் கணவர் ராஜா உடன் உறவினர் சூரியாவின் வீட்டிற்குப் பணம் நகை ஆகியவற்றைக் கேட்க சென்றுள்ளார். அப்போது சூரியா பணம், நகை ஆகியவற்றைத் தர மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.பின்னர் தன் கணவர் ராஜா உடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது சரளா சின்னசாமி வட்டம் பகுதியில் இரு சக்கர வாகனத்தை நிறுத்துமாறு கூறிவிட்டு தன் கணவன் கண்முன்னே அங்கிருந்த பாலகிருஷ்ணன் என்பவரின் 100 ஆழமுள்ள விவசாயக் கிணற்றில் குதித்துள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த கிராம மக்கள் உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் ஆலங்காயம் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் கிராம மக்களின் உதவியுடன் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் சரளாவை சடலமாக மீட்டனர்.

சடலத்தைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய ஆலங்காயம் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உறவினரிடம் கொடுத்த நகை மற்றும் பணத்தைத் திருப்ப கேட்ட போது தர மறுத்த உறவினரால் விரக்தியில் கணவன் கண்முன்னே மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பு:

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் தற்காலிகமானதுதான். தற்கொலை எதற்கும் தீர்வாகாது. ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் உருவானாலோ அதில் இருந்து மீண்டும் வர கீழ்க்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மைய எண்: 104

சினேகா தொண்டு நிறுவனம்:

எண்-11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.

தொலைபேசி எண்: 044 24640050 மற்றும் 044 2464 0060

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com