திருப்பத்தூர் அருகே கனமழை பெய்ததால் ரயில்வே தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பகுதியில் இருந்து புதுப்பேட்டை ரோடு ரயில்வே தரைப்பாலம் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நாட்றம்பள்ளி வழியாகக் குப்பம் செல்லும் பிரதான சாலையாக விளங்கி வருகிறது. பிரதான சாலையாக விளங்கக்கூடிய இந்த ரயில்வே தரைப்பாலத்தில் மழைக்காலங்களில் மழைநீரில் மூழ்கி போக்குவரத்துப் பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு விடிய, விடிய பெய்த கனமழையால் ரயில்வே தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்துப் பாதிப்புக்கு உள்ளானது. இதனால் ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்தையும் மற்றும் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து திடீரென சாலை மறியல் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில்,”ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் இந்த ரயில்வே தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்துப் பாதிப்படைகிறது. இதுகுறித்து முன்னாள் மாவட்ட ஆட்சியரிடம் மழைநீர் செல்ல வழிவகைச் செய்யுமாறு கோரிக்கை வைத்தோம். ஆனால் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தத் தரைப்பாலம் வழியாக மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலையாகவும் , பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலையாகவும் உள்ளது.
இங்கு நிரந்தரமாக மழைநீரை அப்புறப்படுத்த வழிவகைச் செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகரமன்ற தலைவர் சங்கீத வெங்கடேசன் மறியலில் ஈடுபட்டவரிடம் இரண்டு வாரங்களில் நிரந்தரமாக மழைநீர் செல்ல வழிவகை செய்து தருவதாகக் கூறியதன் அடிப்படையில், வாகன ஓட்டிகள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.