நாட்றம்பள்ளி அருகே நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த ஜங்களாபுரம், வெள்ளாள தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியர் செந்தில்குமார். இவருடைய மகன் பரமேஸ்வரன் (வயது17) பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி 392 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
மாணவனுக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஆகவே பர்கூரில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் நீட் தேர்வை மாணவன் எழுதியுள்ளார். நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் கிடைத்து விடுமோ? என அச்சத்திலேயே இருந்துள்ளார்.
இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாடியில் இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதன் பின்னர் அங்கு வந்த அவருடைய பெற்றோர்கள் நீண்ட நேரமாக மகனை காணவில்லை என தேடி உள்ளனர். அப்பொழுது மாடியில் இருந்த அறை உள்பக்கமாக பூட்டி உள்ளதால் நீண்ட நேரமாக கதவைத் தட்டி உள்ளனர்.
ஆனால், கதவை திறக்காத நிலையில், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே பார்த்தபோது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து நாட்றம்பள்ளி போலீசார் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பு:
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் தற்காலிகமானதுதான். தற்கொலை எதற்கும் தீர்வாகாது. ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் உருவானாலோ அதில் இருந்து மீண்டு வர கீழ்க்காணும் எண்களை அழைக்கலாம்.
மாநில உதவி மைய எண்: 104
சினேகா தொண்டு நிறுவனம்:
எண்-11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.
தொலைபேசி எண்: 044 24640050 மற்றும் 044 2464 0060