ரகசியமாக நடத்தப்பட்ட திருச்செந்தூர் நகராட்சி கூட்டம்- காரணம் என்ன?

நகராட்சி தலைவி மற்றும் நகராட்சி கமிஷனர் கேட்டபோது முறையாக அவர்கள் பதில் சொல்ல மறுத்துவிட்டனர்.
திருச்செந்தூர் நகராட்சி
திருச்செந்தூர் நகராட்சி

திருச்செந்தூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் ரகசியமாக நடத்தப்பட்டது. பத்திரிகையாளர்களுக்கு கூட தகவல் சொல்லாமல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியின் கவுன்சிலர்கள் கலந்து கொள்ளும் சாதாரண கூட்டம் 60 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் விருப்பம் உள்ள பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். கண்டிப்பாக பத்திரிகை மற்றும் ஊடக செய்தியாளர்கள் கலந்து கொள்வார்கள்.

அனைவருக்கும் தகவல் கொடுத்து தீர்மானங்களை வெளியிட்டு நடைபெறும் இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள மக்களின் கோரிக்கை பற்றி தெரிவிப்பார்கள்.

இது பற்றிய செய்திகள் வெளிப்படையாக வெளியிடப்படும். இதனால் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூட்டத்தில் நடந்த கோரிக்கைகள் விவாதங்களைப் பற்றி தெரிந்து கொள்வார்கள். மேலும் டெண்டர்கள் பற்றி கூட்டத்தில் பேசப்படும்.இந்த நடைமுறையானது தமிழக முழுவதும் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சியில் இருந்து வருகிறது.

ஆனால் திருச்செந்தூர் நகராட்சியில் நடைபெறும் சாதாரண கூட்டத்தில் செய்தியாளர்கள் பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் தொடர்ந்து கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

சுற்றுலா நகரமான திருச்செந்தூரில் குடி தண்ணீர் தட்டுபாடு சாலை வசதி, பாதாள சாக்கடை போன்ற பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த கூட்டமானது ரகசியமாக பொதுமக்கள் செய்தியாளருக்கு அனுமதி இன்றி நடைபெற்றது. பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இது பற்றி நகராட்சி தலைவி மற்றும் நகராட்சி கமிஷனர் கேட்டபோது முறையாக அவர்கள் பதில் சொல்ல மறுத்துவிட்டனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com