தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அமைதி நகர் என்ற மீனவ கிராமம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நாட்டுப்படகு மூலம் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். அமலி நகர் கிராமத்தில் தூண்டில் வளைவு பாலம் வேண்டும் என்று நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்செந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏவும் தமிழக கால்நடை மற்றும் மீன்வளத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனிடம் தொடர்ந்து மனு அளித்து வந்துள்ளனர். மீனவர்களின் ஏற்றுக் கோரிக்கையை ஏற்று 2022 -ம் ஆண்டு சட்டப்பேரவையில் மீன்வள மானிய கோரிக்கையின் போது 58 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் ஓராண்டைக் கடந்தும் கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை என கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து மீனவர்கள் 2-வது நாளாகக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். மேலும் தங்களது கோரிக்கையை ஏற்று உடனடியாக தூண்டில் வளைவு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், வருகின்ற 18-ம் தேதி இராமநாதபுரத்தில் முதலமைச்சர் கலந்து கொள்ளும் மீனவர்கள் மாநாட்டைப் புறக்கணித்து கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக அமலி நகர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கால்நடை மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். "அமளி நகரில் தூண்டில் வளைவு அமைக்க ஒதுக்கப்பட்ட நிதி அப்படியே இருக்கிறது. ஆனால் தேசிய பசுமை தீர்ப்பாயம் கடற்கரையில் எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது என்று தீர்ப்பளித்து இருக்கிறது. எனவே எங்களால் தூண்டில் வளைவு அமைக்க முடியவில்லை. இதைச் சம்பந்தப்பட்ட அமலிநகர் மீனவ சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்து விட்டோம். ஒரு சிலர் இது போன்ற தகவல்களைத் தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும் அமலி நகர் மீனவர் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவோம்" என்றார்.