விளாத்திகுளத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தேரில் சமுதாயக்கொடி கட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம்,விளாத்திகுளத்தில் இருக்கும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், அந்தப் பகுதியில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்தக் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பத்தாவது நாளான நேற்று தேவேந்திர குல வேளாளர் சமுதாய மண்டகப்படி சார்பில் தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட தேரோட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் தங்கள் சமுதாயக் கொடியை தேரில் கட்ட வேண்டும் என்று விரும்பினர். அதற்கு இந்து சமய அறநிலையத்துறையும் காவல்துறையும் அனுமதிக்கவில்லை.
ஆனால் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு அங்குக் காவல்துறையினர் எண்ணிக்கையில் இல்லை. அதைப் பயன்படுத்திய ஒரு சிலர் தேர் மீது ஏறி தங்கள் சமுதாயக்கூடிய கட்டி விட்டனர். இதனால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் மாற்று சமுதாயத்தினர் யாரும் இந்த விவகாரத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குப் பிறகு கூடுதல் எண்ணிக்கையில் குவிக்கப்பட்ட காவல்துறையினர் தேர் கொஞ்ச தூரம் சென்று நிலையில் அந்தக் கொடியை அகற்றினர்.
இதுகுறித்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "சித்திரை தேர் திருவிழாவின் போது வருடா வருடம் இதே பிரச்சனை கிளம்பிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இந்த வருடம் அவர்கள் கொடியை கட்டி விட்டனர். இதே கோரிக்கையை மற்ற சமுதாயத்தினரும் வைத்தால் சிக்கல்தான். எனவே வரும் காலங்களில் இது போன்ற பிரச்சினை தவிர்க்க ஆலோசிக்கப்படும்" என்றார்கள்.