தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகேயுள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ். அவர் கடந்த ஏப்ரல் மாதம் அலுவலகத்தில் வழக்கமான பணியில் இருந்தார். அப்போது திடீரென அலுவலகத்திற்குள் புகுந்த இருவர், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட லூர்து பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக கலியாவூர் பகுதியைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். ராமசுப்பிரமணியுடன் சேர்ந்து விஏஓவை கொலை செய்த மாரிமுத்து என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வம் தலைமையில் நடந்து வந்தது. இந்த கொலை வழக்கை விரைந்து முடிக்கும் நோக்கத்தோடு சாட்சிகளிடம் விரைந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றவாளிகள் ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோருக்கு ஆயில் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார் நீதிபதி செல்வம். இந்த வழக்கு 5 மாத காலத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விரைவாக தீர்ப்பளிக்கப்பட்டது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.