தூத்துக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையில், போலீசார் மெத்தனமாக பணி செய்வதாக எழுந்த புகாரை அடுத்து, மாவட்ட எஸ்.பி. பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகரின் தீராத பிரச்சினை போக்குவரத்து நெரிசல் தான். முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதி கிடையாது. ஒரு சில இடங்களைத் தவிர கார்கள் பார்க்கிங் செய்வதற்கு இடவசதி கிடையாது. இதனால் முக்கிய நேரங்களில் தூத்துக்குடி மாநகர் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஒரு கூட்டம் நடந்தது. மறு நாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் ஒரு கூட்டம் நடந்தது. இரண்டு கூட்டங்களிலும் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். யார் பேச்சைக் கேட்பது? யார் சொல்லை வைத்து இறுதி முடிவை எடுப்பது என்பது தெரியாமல் அதிகாரிகள் திணறிப் போனார்கள்.
இதற்கிடையில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்து பணியை சரியாக செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்வோரின் வேகத்தையும் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் விபத்துகளைத் தவிர்க்க முடியவில்லை. இதுகுறித்து மாவட்ட போலீஸ் எஸ்.பி. பாலாஜி சரவணனுக்கு புகார்கள் பறந்தன.
அதைத் தொடர்ந்து எஸ்.பி. பாலாஜி சரவணன் நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்தார். நேற்று மாலை அவர், தூத்துக்குடி குரூஸ் பர்ணாந்து சிலை, பழைய மாநகராட்சி அலுவலகம், பீச்சோடு மற்றும் ரோச் பார்க் ஆகிய இடங்களில் அதிரடியாக களமிறங்கி ஆய்வு பணிகளைச் செய்தார். அசட்டையாக வேலை செய்த போக்குவரத்து போலீசார் எச்சரிக்கப்பட்டனர். அந்த சமயத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை அவரே சோதனை செய்து அனுப்பி வைத்தார்.
இது பற்றி எஸ்.பி. பாலாஜி சரவணனிடம் கேட்டோம். "இது வழக்கமான ஆய்வு பணிதான். போக்குவரத்து குறித்து தொடர்ந்து புகார்கள் வந்ததால் போக்குவரத்து போலீசாரிடம் சற்று சிரமம் எடுத்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தினேன்" என்றார்.