உப்பளத்தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளதற்கு, ’கரிக்கும் வாழ்வில் இனிக்க செய்யும் அறிவிப்பு’ என தொழிலாளர்கள் வரவேற்றுள்ளனர்.
இந்தியாவில் உப்பு உற்பத்தியில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இரண்டாவது இடம் வகிக்கிறது. தமிழகத்தில் தூத்துக்குடி, வேதாரண்யம், ராமநாதபுரம், மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. உப்பளதொழிலில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணி செய்கிறார்கள்.
சுட்டெரிக்கும் வெயிலில் குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமின்றி போதிய வேலை வாய்ப்பு, நியாயமான கூலி, பாதுகாப்பான பணிச்சூழல், வீட்டு வசதி, விபத்து பாதுகாப்பு என்று எவ்வித தொழிலாளர் நலன்களுக்கும், உரிமைகளுக்கும், வாழ்வாதாரத்திற்கும் உரிய உத்திரவாதம் இல்லாமல் வாழ்ந்து வரும் உப்பளத் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை மழைக்கால நிவாரணம், உப்பள தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் வேண்டும் என்பதாகும்.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் உப்பளத்தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக வருடத்திற்கு ரூ.5000 வழங்கப்படும். உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என்று சொன்னது. 2022 ம் ஆண்டு உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ. 5000 வழங்கப்பட்டது.
இப்போது உப்பளத்தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் தொழிலாளர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இது குறித்து அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டோம்."உப்பள தொழிலாளர்களின் கரிக்கும் வாழ்வினை இனிக்க செய்வதற்கான அறிவிப்பாக இதை பார்க்கிறோம்.
இந்திய அரசின் தொழிலாளர் தொகுப்பு சட்டங்களின் கீழ் நல வாரியங்கள் அனைத்தும் கலைக்கப்படும் என்ற பேராபத்து சூழ்ந்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசு உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டதன் வாயிலாக, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அத்தனை நல வாரியங்களும் கலைக்கப்படாது காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையை தமிழ்நாடு அரசு தெரியப்படுத்தியுள்ளது.
உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறைக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும், தூத்துக்குடி எம்.எல்.ஏ-வும், சமூக நலத்துறை அமைச்சருமான கீதா ஜீவனுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.