தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகில் இருக்கும் ஆதிச்சநல்லூர் தமிழர்களின் பாரம்பரிய சின்னமாக பார்க்கப்படுகிறது. இந்த ஊர் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. பரம்பு போல் காணப்படும் இந்த பகுதியில் முதன்முதலாக 1876 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜாவோர் என்பவர் அகழ்வாராய்ச்சி செய்தார். அதற்குப் பிறகு 1896 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பவர் அகழ்வாராய்ச்சி செய்தார். 2004 ஆம் ஆண்டு முதல் மத்திய, மாநில அரசுகள் இங்கு அகழ்வாராய்ச்சி பணிகளை செய்து வருகிறது.
இங்கிருந்து மண்பாண்டங்கள், இரும்பு கருவிகள், இரும்பு ஆயுதங்கள், தங்கம் மற்றும் வெண்கல நகைகள், அரிய வகை கல் வகைகள், மனித எலும்புகள் எடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பொருள்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பொருட்கள் இப்போது அங்கேயே கண்காட்சிகளில் வைக்கப்பட்டுள்ளன. அதை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வரும் பணியில் மத்திய அரசு இறங்கி இருக்கிறது.
இந்தநிலையில் தான் ஆதிச்சநல்லூரில் மத்திய அரசின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் பழங்கால பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக புதிய அருங்காட்சியகம் அமைய இருக்கிறது. இந்த மாதம் 28ஆம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டுவதாக இருந்தது. தற்போது இந்த தேதி அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக பத்து கோடி ரூபாய் முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அருங்காட்சியகம் அமைந்திருக்கும் பகுதியை தூத்துகுடி மாவட்ட ஆட்சியர் நேற்று பார்வையிட்டார்.
- அண்ணாதுரை