திருவாரூரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸார் ஒரு செருப்பை அடையாளமாக வைத்து கைது செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம், எண்ணக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக சக்தி விமலா என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சக்தி விமலா எப்போதும் போலப் பணி முடிந்து வீட்டிற்குச் செல்லும் போது கற்கத்தி பாலம் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், ஆசிரியை கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில், போலீஸார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதில் இருசக்கர வாகனத்தில் இருவர் வேகமாகச் செல்வது பதிவாகி இருந்தது. வாகனம் வேகமாகச் சென்றதால் வண்டி எண்ணை போலீஸாரால் கண்டறிய முடியவில்லை. ஆனால் பின்னார் அமர்ந்து சென்ற நபர், வெள்ளை நிற செருப்பு அணிந்திருந்ததால் அதனை வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டர். அப்போது போலீஸார் சந்தேகத்திற்கிடமான இருவரை பிடித்து விசாரித்துள்ளனர்.
பின்னர் நடந்த விசாரணையில் ஆசிரியையிடம் வழிப்பறி செய்தது உறுதியாகி உள்ளது. இதில் இமானுவேல் மற்றும் கோகுல்ராஜ் ஆகியோர் ஈடுபட்டுள்ளதும், இவர்கள் அப்பகுதியில் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் இருவரையும் கைது செய்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தொடர் வழிப்பறியில் ஈடுப்பட்ட இருவரை ஒரு செருப்பைக் கொண்டு கைது செய்த போலீஸாரின் செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.