திருவாரூர் மாவட்டத்தில் சிறையிலிருந்தபடியே திட்டம் தீட்டி பல வீடுகளில் கொள்ளையடித்த தந்தை, மகன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே செட்டியமூலை பகுதியை சேர்ந்தவர் கமருதீன். இவரது மனைவி ரபியா பேகம். கணவர் இறந்துவிட்டதால் மகன்கள் சிராஜுதீன், ஆசிப் முகமது மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த மாதம் 28ம் தேதி தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 17 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூபாய் 3 இலட்சத்து 50,000 ரூபாய் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்து அதிர்ந்து போயினர். திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதேபோல் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், திருவாரூர், ஆலிவலம் என முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் தொடர் திருட்டுகள் அரங்கேறவே திருவாரூர் மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.
இந்நிலையில், திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் பை-பாஸ் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பையில் பணக்கட்டுகளுடன் இருசக்கரவாகனத்தில் வந்த தென்னம்புலம் நடுக்காட்டைச்சேர்ந்த மகேந்திரன் என்பவரை பிடித்து விசாரிக்கையில் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியுள்ளார். பின்னர் அவரை தனிப்படை போலீசாரிடம் ஒப்படைக்க அவர்கள் ‘முறையாக’விசாரித்ததில் மகேந்திரனும், அவரது மகன் மகேஷும் சேர்ந்து தங்கள் கூட்டாளிகள் துணையுடன் திருவாரூர் மாவட்டம் முழுவதும் திருட்டுகளில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது.
இதுகுறித்து தனிப்படை போலீசாரிடம் பேசினோம். “மகேந்திரனும், அவரது மகன் மகேஷும் ஒரு வழக்கு ஒன்றில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அப்போது இவர்களுக்கு வடபாதிமங்கலம் பிரதாப், விஜய், முத்துப்பேட்டை கொய்யாத்தோப்பைச் சேர்ந்த வினோத், திட்டச்சேரி நத்தம் காலனி தெருவைச்சேர்ந்த எபினேசர் ஆகிய நால்வரும் பழக்கமாகி உள்ளனர். இந்த நால்வரும் ஏற்கனவே பல திருட்டு, தாலிச்செயின் பறிப்பு வழக்குகளில் சிக்கி உள்ளனர். மேற்படி ஆறு பேரும் சிறையிலேயே திருவாரூர் மாவட்ட பகுதிகளில் எந்தெந்த வீடுகளில் கொள்ளையடிக்கலாம்? என்பது குறித்து ஆலோசனை செய்திருக்கின்றனர். அதன்படி சிறையிலிருந்து பெயிலில் வெளியே வந்த அனைவரும் ஒன்றுகூடி தாங்கள் ஏற்கனவே கொள்ளையடிக்க முடிவு செய்து வைத்திருந்த வீடுகளை பார்வையிட்டு தக்க சமயத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையை அரங்கேற்றி இருக்கின்றனர்.
ஒவ்வொரு இடத்தில் கொள்ளை முடிந்த பின்னர் அனைவரும் ஊட்டி, கொடைக்கானல் என மலைப் பிரதேசங்களுக்கு சென்று மது, மாது என உல்லாசம் அனுபவித்துவிட்டு தங்களுக்குரிய பங்குகளை பிரித்து வாங்கிக் கொண்டு திரும்புவார்களாம். தற்போது கைதான இவர்களிடமிருந்து மொத்தம் 40 பவுன் நகைகள், 3 இலட்ச ரூபாய் ரொக்கம், இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறது”என்றனர்.
கொள்ளையர்களை விரைவாக கைது செய்த போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் பாராட்டுகளை தெரிவித்தார். அதேசமயம் திருத்துறைப்பூண்டியில் கடந்த மாதம் டாக்டர் ஒருவருடைய வீட்டில் 100 பவுன் நகைகள், 2 இலட்ச ரூபாய் பணம் கொள்ளைபோன வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை நெருங்கி விட்டோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்பட்டுவிடுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
-ஆர்.விவேக் ஆனந்தன்