திருத்துறைப்பூண்டி அருகே வாய்க்காலில் அரசு பேருந்து கவிழ்ந்து டிரைவர் கண்டக்டர் உள்பட 54பேர் காயம் ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியிலிருந்து அரசு பேருந்து ஒன்று மதியம் 3 மணிக்கு 52 பயணிகளுடன் தொண்டியக்காட்டிற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பாண்டி பகுதியில் எதிரே வந்த லாரிக்கு வழிவிட ஒதுங்கியபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகே இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த பகுதியில் இருந்தவர்கள் விபத்தை கண்டு அதிர்ந்து போய் ஓடிச்சென்று பேருந்திற்குள் இருந்தவர்களை வெளியே தூக்கி காப்பாற்றி இருக்கின்றனர். இந்த விபத்தில் பலருக்கு தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்ததோடு, சிலருக்கு கை, கால்கள் முறிவும் ஏற்பட்டது. உடனே காயம்பட்டவர்கள் அனைவரயும் 108 ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
பேருந்தில் பயணம் செய்த டிரைவர் கண்டக்டர் உள்பட 54 பேரில் ஆண்கள் 15 பேரும், பெண்கள் 39 பேரும் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆண்கள் 5 பேருக்கும், பெண்கள் 5பேருக்கும் கடுமையான காயம் ஏற்பட்டபடியால் அவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-ஆர்.விவேக் ஆனந்தன்