திருவண்ணாமலை: ’போலீஸுக்கு தகவல் கொடுத்தது யாரோ?’- போதைக் கும்பலால் மாற்றுத்திறனாளிக்கு நேர்ந்த சோகம்

நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் வரதன்.
ஆயுதங்களால் தாக்கப்பட்ட மாற்றுத் திறனாளி
ஆயுதங்களால் தாக்கப்பட்ட மாற்றுத் திறனாளி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் டெய்லர் வரதன். மாற்றுத்திறனாளியான இவர் சமூக ஆர்வலர். தையல் தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி விட்டது. மனைவி பெயர் வசந்தா. இந்தத் தம்பதிக்கு பார்த்திபன் என்ற மகனும், யுவஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். அவர்கள் முறையே பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கின்றனர். அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை. அவருக்கு அஜித், நாகமணி என்ற இரண்டு மகன்கள். அவர்கள் போதைப்பொருட்கள் விற்றதாக சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசாருக்கு வரதன் தகவல் தெரிவித்துள்ளார். இதனால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் நொந்து போன வரதன் அந்தக் கிராமத்தை விட்டு செய்யாறு அடுத்த மாமண்டூர் கிராமத்தில் உள்ள ரோட்டு தெருவில் வாடகை வந்து தையல் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் மீண்டும் எழுமலை மற்றும் அவரது மகன்கள் அஜித், நாகமணி போதைப் பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு யாரோ தகவல் கொடுத்துள்ளார்கள். அதையும் வரதன்தான் கொடுத்திருப்பார் என்று நேற்று மாலை வரதன் கடையிலிருந்து வீட்டுக்கு நடந்து போய்க் கொண்டிருந்த போது ஏழுமலையும் அவரது மகன்கள் உட்பட இன்னும் இரண்டு பேர் என மொத்தம் ஐந்து பேர் கத்திகளால் வரதனை வெட்டினர். நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் வரதன்.

அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் பைக்குகளை போட்டுவிட்டு ஐந்து பேரும் தப்பியோடி விட்டனர். காஞ்சிபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வரதன் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளார். வரதனின் மனைவி வசந்தா இதுகுறித்து தூசி காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீசார் ஐந்து பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

-அன்புவேலாயுதம்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com