திருவண்ணாமலை அருகே சண்டையை விலக்கிவிட்டவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த விளை என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு. விவசாயக் கூலி மற்றும் மாடுகளிடம் இருந்து பால் கறக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உமா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இவர் பால் கறக்க போய்க்கொண்டிருந்த போது, அதே கிராமத்தைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளிகளான சிவசங்கர், சிவா ஆகியோர் மது அருந்திவிட்டு ஒருவரை ஒருவர் சட்டையை பிடித்துக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த சண்டையை கண்ட சேட்டு, இருவரையும் விலக்கி விட்டு சிவாவை வீட்டுக்கு அனுப்பியுள்ளார். 'நீ எனக்கு ஆதரவாக பேசாமல் சிவாவிற்கு ஆதரவாக பேசுகிறாயா?' என்று சேட்டுவிடம் சண்டையிட்டுள்ளார் சிவசங்கர். அப்பொழுது அங்கு வந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பினர்.
ஆனால், சிவசங்கர் மீண்டும் சேட்டுவின் வீட்டிற்கு போய், 'நீ சிவாவுக்கு ஆதரவாக ஏன் பேசினாய், இனி எனக்கு நீயும் எதிரி' என்று சண்டை போட்டுள்ளார்.
இனி இவன் நம்மை தூங்க விடமாட்டான் என்று யாருக்கும் சொல்லிக்கொள்ளாமல் ஊருக்கு சற்று தொலைவில் இருக்கும் நாகாத்தம்மன் கோயிலில் போய் படுத்துக் கொண்டிருக்கிறார் சேட்டு.
இந்த விஷயம் எப்படியோ மோப்பம் பிடித்துக் கொண்ட சிவசங்கர் யாருக்கும் தெரியாமல் கோயிலருகே போய் தூங்கிக்கொண்டிருந்த சேட்டுவின் தலையில் அங்கிருந்து சிமெண்டால் ஆன ஹாலோபிளாக் கல்லை தூக்கிப் போட்டுள்ளார்.
எதிர்பாராத தாக்குதலில் தூக்கத்தில் நிலைகுலைந்த சேட்டு ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். சிவசங்கர் தப்பியோடிவிட்டார்.
இந்த சம்பவத்தை பார்த்துவிட்டு அக்கம் பக்கத்தினர் போலீஸிக்கு தகவல் சொல்ல டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் புகழ் ஆகியோர் சேட்டுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்த சேட்டு அங்குள்ள ஏரியில் பரிசல் மூலம் தப்பி, நடுஏரியில் இருந்த புதரில் பதுங்கி இருந்தார். இதைக் கண்டுபிடித்த போலீசார் இன்னொரு பரிசலில் சிவசங்கரை விரட்ட சிவசங்கர் பரிசலை எடுத்துக் கொண்டு கரைக்கு தப்பி ஓடிவிட்டான்.
ஆனாலும், போலீசார் விரட்டி ஆரணி அடுத்த சீனிவாசபுரம் கூட் ரோடில் சிவசங்கரை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- அன்புவேலாயுதம்