திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான மேலும் ஒருவரை போலீஸார் துப்பாக்கி முனையில் ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் மூளையாகச் செயல்பட்ட முக்கியக் குற்றவாளியான ஆசிப் ஜாவித் என்பவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனால் நியமிக்கப்பட்ட தனிப்படையினர் கடந்த ஒரு மாத காலமாக புதுடெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேஷ், அசாம் ஆகிய மாநிலங்களில் தேடி வந்தனர்.
இறுதியாக ஹரியானா, ராஜஸ்தான் மாநில எல்லையில் உள்ள ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில் இருந்த பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், நேற்று திருவண்ணாமலை மாவட்ட தனிப்படையினர் அதிரடியாக துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்து அவரிடமிருந்து ரூ.15 லட்சம் ரொக்க பணம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். குற்றவாளியை விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டு பின்னர் காவல் வாகனம் மூலம் திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர்.
போலீஸார் முக்கிய குற்றவாளியை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
போலீஸாரின் இந்த செயலை அறிந்த தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திருவண்ணாமலை மாவட்ட தனிப்படையினருக்கு ஒரு லட்ச ரூபாய் வெகுமதி அளித்து பாராட்டியுள்ளார்.