கலெக்டர் அலுவலகங்களில் மனு கொடுக்க வரும் பலர் திடீரென்று மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முற்படுவதும் போலீசார் தடுத்து வருவதும் வாடிக்கையாகி வருகிறது. கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு போலீசார் எவ்வளவோ சோதனை செய்தாலும் மண்ணெண்ணெய் கேனை எடுத்துக்கொண்டு வந்து விடுகின்றனர்.
நேற்றும் அப்படித்தான். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். போலீசார் பாய்ந்து தண்ணீரை ஊற்றித் தடுத்தனர். பின்னர் கலெக்டர் குறைதீர் அறைக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அவர் பேர்ணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜீவ் காந்தி என்பது தெரியவந்தது. அவர் கொடுத்த மனுவில், ’’என் மனைவி பெயர் சகுந்தலா. எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்கு சென்ற எனது மனைவி சகுந்தலா திரும்ப வீடு வந்து சேரவில்லை. விசாரித்த போது எங்கள் ஊரைச் சேர்ந்த டில்லி பாபு என்பவருடன் சென்றது தெரியவந்தது. அதன்பிறகு ஊரார் அவர்களை கண்டுபிடித்து அழைத்து வந்தனர். என் மனைவியை என்னிடம் சேர்த்து வைத்தனர். இந்நிலையில் மறுபடியும் சில மாதங்களுக்கு முன் என் மனைவி காணாமல் போய்விட்டார்.
நான் குழந்தைகளை வைத்துக் கொண்டு சிரமப்படுகிறேன். என் மனைவியை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும்’’ என்று எழுதியிருந்தார். போலீசார் விரைந்து அவரது மனைவியை கண்டுபிடித்துக் கொடுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி சொன்னதை அடுத்து ராஜீவ்காந்தி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
என்னத்த சொல்ல…
-அன்புவேலாயுதம்