ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போன இளைஞரின் உடல் அழுகிய நிலையில் பாதி கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை வ.உ. சி நகரைச் சேர்ந்த 25 வயதான வாலிபர் விஜய்.கடந்த மாதம் 10-ம் தேதி காணாமல் போனதாக அவருடைய தாய் அளித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
விஜய்யின் நண்பரோடு கடைசியாக தொலைபேசியில் பேசிவிட்டு கூடவே சென்றதாக சொல்லப்படும் நபரிடம் விசாரணை செய்யப்பட்டதை தொடர்ந்து திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் புதூர் அருகில் விவசாய விளைநில கிணற்றில் விஜயின் உடல் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரின் போலீசார் தீயணைப்பு மீட்பு குழுவினர் அந்த கிணற்றில் இறங்கி பிரேதத்தை தேடிய நிலையில்,அழுகிய நிலையில் பாதி உடல் கண்டெடுக்கப்பட்டது.
பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மீதி உடல் பாகத்தை தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.