திருவண்ணாமலை அருகே நெசவாளி எம்.ஜி.ஆர் என்பவரிடம் லஞ்சம் கேட்ட ஊராட்சி மன்ற தலைவி மற்றும் அவரது கணவரை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம், கீழ்ப்பட்டுக் கிராமம் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் எம்ஜிஆர். இவர் நெசவு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் சரஸ்வதி. இவரது இரண்டு மகன்களும் வடமாதிமங்கலம் அரசு பள்ளியில் படிக்கும் படித்து வருகின்றனர். இவர் 2021-ஆம் சொந்த கிராமத்தில் காலிமனை வாங்கி அதில் வீடு கட்ட பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளியாகத் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீடு கட்டி முடித்துக் குடும்பத்துடன் குடிபுகுந்தார்.
இந்நிலையில் அந்த வீட்டிற்கு வரி செலுத்த அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் வேண்டாமணி அவரது கணவருடன் சேர்ந்து நெசவாளியான எம்.ஜி.ஆரிடம் ”பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளியாய் தேர்வு செய்து வீடு கட்டியதற்கு எனக்கு எந்தப் பணமும் இதுவரை கொடுக்கவில்லை. வீட்டு வரி ரசீது போட்டு தருவதற்காவது ரூ.30,000 லஞ்சமாக கொடு என்று கேட்டிருக்கிறார்.
இதனால் மனமுடைந்த எம்.ஜி.ஆர் திருவண்ணாமலை விஜிலன்ஸ் டி.எஸ்.பி வேல்முருகனிடம் புகார் மனு அளித்தார். நேற்று காலை எம்.ஜி.ஆர் லஞ்சப்பணத்தை வயலில் வேலை செய்துகொண்டிருந்த தலைவர் வேண்டாமணி மற்றும் அவருடன் இருந்த கணவர் மணியிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைவாக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி வேல்முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மைதிலி, சப் இன்பெக்டர்கள் கோபிநாத், செல்வராஜ், கமல், முருகன் எனப் பெரும் போலீஸ் படையே கீழ்ப்பட்டு ஊராட்சி மன்ற தலைவி மற்றும் கணவர் மணி இருவரையும் கைது செய்தது.
ஏற்கனவே, இதே திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியத்தில் எடப்பிறை ஊராட்சி மன்ற தலைவரான அதிமுகவைச் சேர்ந்த ஜீவா சென்ற மாதம் தான் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவி எம்.ஜி.ஆர் என்ற பெயருக்காகவாவது லஞ்சம் கேட்காமல் இருந்திருக்கலாம்
-அன்புவேலாயுதம்