திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக்கில் லிப்ட் கொடுத்து அழைத்துப் போன நண்பனை தாக்கி கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு தோழியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மவட்டம், விருதாச்சலம் தாலுகா விஜயமாநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி விட்டது. இவர் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள வெம்பாக்கத்தில் தனியார் விடுதியில் தங்கி மாங்கால் கூட்ரோடு அருகில் உள்ள ஷூ தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் மாலை பணியை முடித்துவிட்டு தனது நண்பர் பாபு என்பவருடன் பைக்கில் வெம்பாகத்தில், தான் தங்கியிருக்கும் விடுதிக்குச் சென்றார். அப்போது சித்தாத்தூர் வழியாக நமண்டி ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரில் ஒரே பைக்கில் வந்த மூவர் மடக்கி நிறுத்தியுள்ளனர். உடனே பாபுவை பிடித்து தாக்கி இழுத்து கயிற்றில் கட்டி போட்டுள்ளனர்.
அதற்குள் அந்த இளம்பெண் தப்பி ஓடியிருக்கிறார். ஆனால், அவரை மடக்கி ஆட்கள் இல்லாத பக்கம் இழுத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால், அந்த இளம் பெண் பலம் கொண்டு அவர்களை எதிர்த்து போராடி ஆட்கள் இருக்கும் பகுதிக்கு வந்து விட்டார். அதனைக் கண்ட மக்கள் பலாத்காரம் செய்ய முயன்றவர்களை துரத்தினர். மூவரும் தலை தப்பினால் போதும் என்று பைக்கை எடுத்துக் கொண்டு தப்பினர்.
அந்தப் பெண் உடனடியாக தூசி போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து விவரத்தைச் சொல்ல, விரைந்து எஸ்.ஐ. சுரேஷ் மற்றும் போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து திருவடி ராயபுரம் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர், ரஞ்சித் குமார், விக்னேஷ் ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தொழிற்சாலை நிரம்பிய அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கிருக்கும் சிப்காட் தொழிற்பூங்கவில் பணி செய்யும் பெண்கள் அப்பகுதியில் 24 மணி நேர போலீஸ் அவுட்- போஸ்ட் அமைக்க மாவட்ட எஸ்.பி.க்கு மனு கொடுத்துள்ளனர்.
-அன்புவேலாயுதம்