கும்மிடிப்பூண்டி அருகே இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த மூன்று பேர் சாலை விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் தெச்சி குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் 927 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். உரியக் கட்டுப்பாடுகள் இல்லாத இந்த முகாமில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக முகாம் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் சில மாதங்களாகவே தொடர்ந்து தற்கொலை முயற்சி மற்றும் விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.
இதன் தொடர்ச்சியாக இன்று பெத்திகுப்பம் இலங்கைத் தமிழர் முகாமை சேர்ந்த தயாளன் (19), சார்லஸ் (21) மற்றும் மதுரை இலங்கைத் தமிழர் முகாமை சேர்ந்த ஜான் (20) ஆகியோர் ஒரே இருசக்கர வாகனத்தில் செல்ஃபி எடுத்தபடி முன்னால் சென்ற டேங்கர் லாரியை முந்தி சென்றனர். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீசார் உயிரிழந்த மூவரின் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காகக் கொண்டு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.