திருவள்ளூர்: கல்குவாரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு - துக்க வீட்டுக்கு வந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்

உடல் உபாதையை கழிப்பதற்காக திருத்தணியில் உள்ள 50 அடி ஆழம் உள்ள செயல்படாமல் உள்ள கல்குவாரிக்கு சென்றுள்ளனர்.
உயிரிழந்த மூவர்
உயிரிழந்த மூவர்

திருத்தணியில் துக்க நிகழ்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து வந்தவர்கள் உடல் உபாதையை கழிக்க சென்ற போது கல்குவாரி நீரில் மூழ்கி 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பெரியார் நகரில் வசிக்கும் பாபு என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இறந்து போன பாபுவின் துக்க நிகழ்வுக்காக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பார்வதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன் என்பவரது மனைவி மல்லிகா (65), மாரிமுத்து என்பவரின் மகள் கோமதி (14), வினாயகம் என்பவரது மகள் ஹேமலதா (16) உள்ளிட்ட உறவினர்கள் நேற்று வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை உடல் உபாதையை கழிப்பதற்காக திருத்தணியில் உள்ள 50 அடி ஆழம் உள்ள செயல்படாமல் உள்ள கல்குவாரிக்கு சென்றுள்ளனர்.

கல்குவாரியில் இறங்கிய கோமதி மற்றும் ஹேமலதா இருவரும் வழுக்கி கீழே விழுந்துள்ளனர். குழந்தைகளை காப்பாற்ற மல்லிகாவும் குதித்த நிலையில் 3 பேரும் நீரில் மூழ்கி பலியாகினர்.

இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் திருத்தணி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 3 பேரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  துக்க நிகழ்ச்சிக்காக வந்த இடத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com