திருவள்ளூர்: பகுதி நேர வேலை- கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பரிதாபம்

திருவள்ளூர்: பகுதி நேர வேலை- கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பரிதாபம்
Vimal Raj

கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேரமாக கேட்டரிங் வேலை செய்து வந்த மாணவர், கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் சதீஷ் (20). இவர் சென்னை, கொருக்குப்பேட்டையில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தார். கல்லூரிக்கு செல்லும் நேரம் தவிர்த்து பகுதி நேரமாக உணவு பரிமாறும் கேட்டரிங் வேலைக்கும் சென்று கொண்டிருந்தார்.

கடந்த 23ஆம் தேதி மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் உணவு பரிமாறச் சென்ற கல்லூரி மாணவர் சதீஷ் உணவுப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டிருக்கும் போது கால் தவறி கொதிக்கும் ரசம் பாத்திரத்தில் விழுந்தார். இதில், சதீஷின் வயிறு, தொடை உள்ளிட்ட பகுதிகள் முற்றிலும் தீக்காயம் அடைந்தன.

உடனடியாக அருகிலிருந்தவர்கள் சதீஷை மீட்டு மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பலத்த தீக்காயங்களுடன் 6நாள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கல்லூரி மாணவர் சதீஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பகுதி நேர பணியாக உணவு பரிமாறச் சென்ற கல்லூரி மாணவர் கொதிக்கும் ரசத்தில் விழுந்து தீக்காயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள், உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com