அன்னையர் தினத்தை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று பெற்றோரை சந்தித்துவிட்டு வரும் போது ஆவடியில் ஏற்பட்ட சாலை விபத்தில் இளம் பொறியாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சாலையின் தடுப்பு சுவரில் மோதி கார் குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வசந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் நரேந்திரன்(32). இவர் சென்னை கந்தன்சாவடி அருகே தனியார் கம்பெனியில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜனனி(25). இவர்களுக்கு 9 மாத பெண் கை குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் நரேந்திரன் அன்னையர் தினத்தை முன்னிட்டு நேற்று காலை சொந்த ஊரான அரக்கோணத்திற்கு காரில் சென்று பெற்றோரைப் பார்த்து விட்டு, இரவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஆவடி பூந்தமல்லி நெடுஞ்சாலை, விவேகானந்தன் நகர் அருகே செல்லும் போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தடுப்பு சுவரில் மோதி, குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நரேந்திரனை பொதுமக்கள் மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அன்னையர் தினத்தன்று சொந்த ஊருக்கு சென்று பெற்றோரை சந்தித்து விட்டு வந்த இளம் பொறியாளர் விபத்தில் சிக்கி பலியானது ஆவடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இதற்கிடையில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் கார் விபத்தில் சிக்கி தலை குப்புற கவிழ்ந்து சாலையில் தடுப்பின் நடுவே ஏறி நின்றது போன்ற பதைபதைக்க வைக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது.