பூவிருந்தவல்லி அருகே பட்டம் பிடிக்க மின்மாற்றியில் ஏறிய சிறுவன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அருகே மேப்பூர் தாங்கல் பகுதியை சேர்ந்தவர் பில்லா. இவர் லாரி ஓட்டுநரான வேலை செய்து வருகிறார். இவரது மகன் சஞ்சய். இவர் அருகே உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துத் தேர்வு எழுதியுள்ளார்.
இந்த நிலையில், மேப்பூர் தாங்கல் பகுதியில் உள்ள சென்னை குடிநீர் வாரியத்திற்குச் சொந்தமான வளாகத்தில் உள்ள ஒரு மின்மாற்றியில் பட்டம் ( காத்தாடி) ஒன்று சிக்கிக்கொண்டு இருப்பதைக் கண்டு அதனை எடுக்க மின்மாற்றி மீது ஏறியுள்ளார்.
அப்போது, சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் சிறுவன் பலத்த காயங்களுடன் மின்மாற்றியிலேயே சிக்கிக்கொண்டார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து அங்குக் கூடிய ஊர் மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டு பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.
பட்டத்தை பிடிக்கும் முயற்சியில் மின்சாரத்தின் ஆபத்தை உணராமல் ட்ரான்ஸ்ஃபார்மர் மீது ஏறிய சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் தற்போது சிறுவர்கள் கோடை விடுமுறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு கள்ள சந்தையில் பட்டம் மற்றும் மாஞ்சா நூல்கள் விற்பனை நடைபெறுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதனை உரிய ஆய்வு மேற்கொண்டு முழுமையாக விற்பனையைத் தடுக்கக் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.