திருவள்ளூர்: ’என்னையே டிக்கெட் எடுக்க சொல்றியா’-அரசு பஸ் நடத்துநர் மீது சரிமாரி தாக்குதல்

நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட நடத்துநர்
தாக்குதலில் பாதிக்கப்பட்ட நடத்துநர்

திருவள்ளூர் அருகே அரசு பஸ்சில் டிக்கெட் எடுக்க சொன்னதால் நடத்துநரை சரமாரியாக தாக்கிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் பகுதியில் இருந்து ராமஞ்சேரி பகுதிக்கு பூண்டி வழியாக அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு ராமஞ்சேரி பகுதியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தில் நபர் ஒருவர் பயணச்சீட்டு வாங்காமல் பயணித்துள்ளார்.

அந்த நபரிடம் நடத்துநர் பயண சீட்டு வாங்குமாறு கேட்டுள்ளார். இதில் நடத்துநரிடம் அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து இரவு நேரம் என்பதால் பேருந்து நடத்துநர் இலவசமாகவே பேருந்து பயணச்சீட்டை வழங்கிவிட்டு வந்த நிலையில், பூண்டி நெய்வேலி கூட்ரோடு பகுதியில் ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் பேருந்தை வழிமறித்து நடத்துநரை கற்களால் தலை மற்றும் மூக்குத் தண்டு பகுதியில் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும் பேருந்து கண்ணாடிகளை உடைத்து ஆறு பேரும் தப்பிச் சென்றனர். இதில் மூக்கு மற்றும் தலைப்பகுதியில் பலத்த காயங்களோடு அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த நடத்துநர் மோசஸ் பகவான் தாஸ் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயமடைந்த அவருக்கு தலையில் ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளது. மூக்கு தண்டுவடம் உடைந்து இரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பேருந்து பயணச்சீட்டு வாங்காததை கேட்ட நடத்துநரை தொலைபேசி மூலம் தகவல் அளித்து கூட்டாளிகளை வரவழைத்து பேருந்தை வழிமறித்து நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மர்ம நபர்கள் மீது பெண்ணலூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com