திருப்பத்தூர்: பெரியவர்களுக்கே தூய்மையை உணர்த்தும் சிறுவன்: வைரலாகும் வீடியோ
தமது வாழ்விடங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் பெரியவர்களுக்கே இல்லை என்கிற போது தூய்மையை உணர்த்தும் சிறுவனின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் ஊராட்சி கரிமாபாத் பகுதியில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் சரியாக கழிவு நீர் கால்வாய்கள் சுத்தம் செய்வதில்லை எனவும் தினசரி வீடு வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கும் தூய்மை பணியாளர்கள் அப்பகுதிக்கு வருவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் கரிமாபாத் முதல் தெருவில் வசிக்கும் அப்துல் வாகித் மகன் அப்துல்லா என்ற 5 வயது சிறுவன் கழிவுநீர் கால்வாயில் நீர் தேங்கி உள்ளதைக் கண்டு அடைப்புகளை நீக்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளான். இந்த சிறுவனின் செயல் அனைவரையும் வியப்பாக்கியது மட்டும் இன்றி, ஐந்து வயது சிறுவனுக்கு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணம், தமக்கில்லையே என அனைவரது மனதிலும் எழுந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.