விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலரது நிலையை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என, அஞ்சப்படுகிறது.
இதே, கள்ளச்சாராயத்தை குடித்து செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்து உள்ளதால் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தலைவர் திருமாவளவன், விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார், சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இதன் பிறகு திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்ற டாஸ்மாக் கடை திறந்திருக்கும்போதே கள்ளச்சாராயம் புழக்கம் இந்த அளவுக்கு உள்ளது அதிர்ச்சியை தருகிறது.
வீடுகளுக்குச் சென்றே கள்ளச்சாராயம் விநியோகம் செய்யும் நிலை இருந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் சந்தித்து பேசி இழப்பீடு வழங்கி இருக்கிறார். மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தி வருகிறோம்.
கள்ளச்சாராயத்தை காரணம் காட்டி அரசு மது விற்பனையை அனுமதிப்பது ஏற்புடையதில்லை. உடனடியாக கள்ளச்சாராய வியாபாரிகளின் சொத்தை பறிமுதல் செய்ய வேண்டும்.
நாங்கள் கூட்டணி கட்சிதான். ஆனாலும், நாங்கள் மதுவிலக்கு வேண்டும் என குரல் கொடுக்கிறோம். எதிர்க்கட்சியாக இருக்கிற எடப்பாடி பழனிசாமி என்ன போராட்டம் நடத்தி இருக்கிறார்?
மற்ற கட்சிகள் மீது குற்றம்சாட்டுவது இருக்கட்டும். தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மதுவிலக்கை நடைமுறைப்படுத்தத் சொல்லி போராட்டம் நடத்தினால் அவரோடு சேர்ந்து குரல் கொடுக்க தயாராக உள்ளோம்’ என்றார்.